அறுவகையிலக்கணம்049
அலகெழுத்துகளை இங்ஙனம் பகுத்துக் கொண்ட ஆசிரியர் அவற்றை விரித்துக் கூறத்தொடங்கி நிறுத்த முறையானே முதற்கண் கீழலகை எடுத்துக் கொள்கிறார்.
(36)
கீழ் அலகு
37.ணவ்வே முந்திரி; டஅரைக் காணி;
 நிலைவரை ஒன்றே காணி ஆகும்;
 தவ்வே மா; அதன் ஈற்றைக் குறைத்து
 வலப்புறம் நீட்டல் இருமா ஆகும்;
 கூவொடு சூவும் மும்மா நான்மா;
 எகரமும் ளகரமும் கால்அரை; உகரத்து
 ஈற்றைக் குறைத்துஒரு ரகரம் பொருத்தில்
 முக்கால் எனப்படும்; அரைமா அரைக்கால்
 ஆதிய பிறவும் அலகு நிலையில்
 பிறழா இயல்பிற் பிறங்கும் ஆதலின்
 கிளத்திலம்; இவைதாம் கீழ்அலகு உறுப்பே.
ணகரம் கீழ்முந்திரியின் (1/102400) குறியீடாகும். டகரம் கீழ் அரைக்காணியைக் (1/51200) குறிக்கும். ஒரு தனி செங்குத்துக்கோடு (1) கீழ்க்காணியைச் (1/25600) சுட்டும். தகரம் கீழ்மாவின் (1/6400) குறியாம். தகரத்தின் கடைசிப் பகுதியாகிய கீழ்க் கோட்டின் நீளத்தைக் குறைத்து வலப்புறம் நீட்டினால் கீழ் இருமா (1/3200) எனப்படும்.
கூ, சூ ஆகியன முறையே கீழ்மும்மா (3/6400), கீழ்நான்மா (1/1600) என்பனவற்றைச் சுட்டும். எகர ளகர வடிவங்கள் முறையே கீழ்க்கால் (1/1280), கீழரை (1/640) ஆம். உகர வடிவின் படுக்கைக் கோட்டின் நீளத்தைப் பாதியாக்கி அத்துடன் ரகரத்தை இணைத்தால் கீழ்முக்கால் (3/1280) எனப்படும். கீழ்அரைமா (1/12800) கீழ் அரைக்கால் (1/2560) என்பன போன்ற பிற பின்னங்கள் அவ்வவற்றிற்குரிய குறியீடுகளை இணைத்து எழுதுவதால் பெறப்படுகின்றன. எனவே கூறாதனவற்றை உய்த்து உணர்ந்துகொள்ளலாம். ஆதலின்ஈண்டுத் தனித்தனியே கூறிற்றிலம். கீழ் அலகின் குறியீடுகள் இவைகளே என்றவாறு.