அறுவகையிலக்கணம்053
பிற்காலத்தே இதனை சுஙஉக எனவும் சுருக்கி எழுதத் தொடங்கிவிட்டனர்.
(39)
அளவளகு
40.ளகரத்து ஈறு தொட்டுமேல் இடமா
 வளைத்துஅவ் வரைக்குறுக் கேற்றி நாலின்
 ஈறுஉறப் பொருத்தல் ஆழாக்கு எனப்படும்;
 ளுகரம் தானே உழக்குஎன ஒளிர்தரும்;
 வகரத்து ஈற்று நிலைவரை தள்ளில்
 நாழி யாகும்; பகரமே குறுணி;
 முந்திரி யீற்றை மேற்சுற் றாது
 னுகரத்து ஈறுஎன நிறுவில் பதக்குஆம்;
 தகரம் தூணி; ளகர மேகலம்;
 பின்னும் சிலகூட்டு எழுத்துஎனப் பிறங்கும்
 ஆதலின் இவைதாம் அளவலகு உறுப்பே.
ளகரத்தின் கடைசியிலிருந்து இடப்புறம் மேலாக வளைத்து அங்கிருந்து குறுக்காகப் படுக்கைக் கோடிட்டு சகரத்தின் இறுதி நிலைக்கோடு வரைந்தால் பெறப்படும் வடிவம் ஆழாக்கின் குறியீடாம். ளுகரம் உழக்கைச் சுட்டும். வகர வடிவத்தின் குத்துக்கோடு இல்லாவிடில் அது நாழியைக் குறிக்கும். பகரம் குறுணி ஆகும். முந்திரியின் இறுதிப் பகுதியை மேலே சுற்றாமல் னுகரம்போல முடித்தால் அது பதக்கின் குறியீடு ஆகும். தூணியைக் குறிப்பிடும் சின்னம் தகரம் ஆம். ளகரம் கலம் எனப்படும். இவற்றைத் தவிர வேறு சில அளவலகுகள் கூட்டெழுத்துகளாக இருத்தலின் விரித்து உரைத்தோமில்லை. அளவலகுகளின் முக்கியமான உறுப்புகள் இத்துணையே என்றவாறு.
2 ஆழாக்கு 1 உழக்கு; 2 உழக் 1 உரி; 2 உரி 1 நாழி; 8 நாழி 1 குறுணி; 2 குறுணி 1 பதக்கு; 2 பதக்கு 1 தூணி; 3 தூணி 1 கலம் என்பது பழைய முகத்தலளவை வாய்பாடாகும். இதில் நாழி என்பது ஏறக்குறைய ஒரு படி என்பர் (உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்றது கொண்டு இதனைக் கால் படி என்பாரும் உளர்.)