இகர லகரங்களைச் சேர்த்து எழுதி அதன் கடைசியிலிருந்து ஒரு கீழ்க்கோடிட்டு அதை இடப்புறம் சுழித்து முன்வரைந்த குத்துக்கோட்டின் குறுக்காக வலப்பக்கம் நீட்டி முக்காணிக் குறியீட்டின் ஈற்றுப் பகுதியைச் சேர்த்தால் இலட்சம் என்று ஏற்கலாம் என்பது போன்ற புதிய கூட்டெழுத்துகள் வழக்கில் வந்தாலும் அறிந்தவர்கள் அவற்றை மறுக்க மாட்டார்கள் என்றவாறு. |
நூறாயிரம் எனலே தமிழ் வழக்கு, லக்ஷ என்ற வடசொல் தமிழில் இலக்கம் எனத் தத்பவமாயிற்று. இதற்கும் ஒரு குறியீட்டை ஏற்றுக் கொள்ளும் போது நடைமுறையில் வந்து விட்டால் எதையுமே ஏற்க வேண்டியதுதான் என்ற பொருள் தொனிக்கிறது. (44) |
45. | கூட்டெழுத்து ஒருவாறு உரைத்தனம்; சிறிதுஇனிக் | | குறிப்பெழுத்து இயங்கும் கொள்கைகூ றுதுமே. |
|
கூட்டெழுத்துகளைப் பற்றி ஓரளவு சொன்னோம். இனி அடுத்துக் குறிப்பெழுத்துகள் எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் கொஞ்சம் சொல்வாம் என்றவாறு. |
இந்நூற்பாவில் இப்பிரிவை நிறைவு செய்து அடுத்த பிரிவாகிய குறிப்பெழுத்துகளுக்குத் தோற்றுவாய் செய்து கொள்கிறார். (45) |
7. குறிப்பெழுத்துகள் |
ஒரு சொல்லாகப் படிக்கப்படும் குறியீடுகள் அனைத்தையும் இவர் கூட்டெழுத்துகள் என்றார். இனி அவ்வாறு படிக்கப்படாமல் வெறும் குறியீடுகளாக மட்டும் பயன்படும் சிலவற்றை இதில் கூறுகிறார். இன்று பயன்படுத்தப்பெறும் கால்புள்ளி, முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்புக்குறி போன்றனவற்றையும் இதில் அடக்கலாம். குறிப்பெழுத்து என்பதில் எழுத்து என்ற சொல் எழுதப்படுவது என்ற அளவில் மட்டும் நின்றது. அதாவது இதற்கு ஒலிவடிவம் இல்லை. இதனைக் குறிப்பு எழுத்துகள் என்பதைவிடக் குறியீடுகள் எனலேசாலப் பொருத்தமாம். |