அறுவகையிலக்கணம்059
46.நாழி போலும் விநாயகச் சுழிஎழுத்து
 ஆதியும் அந்தமும் காட்டும்; கிடைவரை
 நடுஓர் நிலைவரை புணர்ந்தது ஆய
 அன்னத் தாட்குறி அயத்தமை காட்டும்;
 இடம்சுழித்து ஈற்றை வலம்உறச் சாய்க்கின்
 இக்குஎன உணர்த்தும்; இதன்ஏ னைக்குறி
 இதுவும்என்று உணர்த்தும்; இவ்வாறு உள்ள
 பல்வகைக் குறிப்பும் பகர்ந்திடல் அரிதே.
நாழியின் குறியீட்டைப்போல் அமைந்த (குத்துக் கோடற்ற வகரம்) பிள்ளையார் சுழி ஒரு பொருளின் தொடக்கத்தையும் முடிவையும் காட்டும். ஒரு படுக்கைக் கோட்டின் குறுக்கே குத்துக்கோடு வெட்டுவதாகிய அம்சபாதம் (+ இன்றைய கூட்டல் குறி) உரிய இடத்தில் ஒன்றை எழுத மறந்துவிட்டதைக்காட்டும். இடது புறமாக ஒரு சுழியிட்டுக் கொண்டு அதன் மேல் வலப்புறமாகச் சாய்த்து வரைந்தால் அது இக்கு என்பதற்குரிய குறிப்பாம். இதனையே மாற்றி எழுதினால்-அதாவது வலப்புறமாக ஒரு சுழியிட்டுக் கொண்டு அதன் மேல் இடப்புறமாகச் சாய்த்தால்-அது இதுவும் என்பதன் குறியீடாம். இவ்வாறு பற்பல குறிப்புகள் உள்ளன. அனைத்தையும் கூறி முடித்தல் என்பது இயலாது என்றவாறு.
முன் நாற்பத்திரண்டாம் நூற்பாவில் கூறப்பட்ட “றகரத் தலை புணர் இகரம்” ஆகிய இக்கு ஒரு பெயர்ச் சொல்லுடன் நான்கன் உருபு சேர்ந்துள்ளதைக் குறிக்கும். எனவே இவர் கொள்கைப்படி அது கூட்டு எழுத்தாயிற்று. இங்கு கூறப்படும் இக்கு என்றும் குறியீட்டின் பொருள் விளங்கவில்லை.
(46)
47.ஓர்ஒலி கலைதொறும் ஒவ்வோர் வடிவுஉடைத்து;
 ஆதலில் பொறிஇனம் அனைத்தும் குறிப்பே.
ஓர் ஒலிவடிவத்திற்கு வரிவடிவம் கொடுக்கப்படும் பொழுது ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு விதமாகக் கொடுக்கப்படுகிறது. அதனால் எழுத்து வடிவங்கள் அனைத்