நூலாசிரியர் காலத்தே ஒரு சிலர் அவ்வாறு வழங்கி வந்திருக்கலாம். இகரத்தை அரை எனலே பெரும்பான்மை. |
ககரத்திற்குப் பிறகு விநாயகர் சுழியிட்டு ஆய்தம் எனலும் புதுமையாக உள்ளது. |
முற்காலத்தில் தமிழில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்புகள் தனித்தனியே இருக்கவில்லை. ஒற்றைக் கொம்பு மட்டுமே இருந்தது. கொல் என்று எழுதப்பட்டிருந்தால் அதைக் கோல் என்றும் படிக்கலாம். இடம் நோக்கியே எழுத்து குறிலா அல்லது நெடிலா எனத் தீர்மானிக்க வேண்டும். பழஞ்சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூன்றிலும் இதைக் காணலாம். |
இந்நூலாசிரியர் இங்கு பட்டியல் போட்டுக் காட்டியவற்றை எல்லாம் தவறானவை என்கிறார். இவற்றுள் சில எழுத்து வளர்ச்சிக்கு முற்பட்டவை; சில பழக்கத்தால் அமைந்தவை. சில எழுத்து வடிவமைப்பு மாற்றங்கள் வீரமாமுனிவரால் செய்யப்பட்டனவாக அறிகிறோம். (48) |
49. | எகர ஒகர உயிர்மிசை ஒற்றின் | | புள்ளி வைத்தமை பொறாஅது ஒருவினர் | | வாழி என்றே வழுத்துதும் யாமே. |
|
எகர ஒகரங்களாகிய உயிரெழுத்துகளின் தலையில்-அவை குறில்கள் எனச்சுட்ட-மெய்யெழுத்துகளுக்கே உரிய புள்ளிவைக்கும் பழக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் மாற்றி விட்டவர்கள் வாழ்க என யாம் வாழ்த்துகிறோம் என்றவாறு. |
முன்பு எ, ஏ, ஒ, ஓ என்பன முறையே எ, எ, ஒ, ஒ, என எழுதப்பட்டு வந்தன. தலையில் உள்ள புள்ளி ஓசையின் மாத்திரைக் குறைவைக்காட்டும். மெய்எழுத்திற்கே அதாவது அரைமாத்திரை ஒலிக்கும் எழுத்திற்கே-உரிய புள்ளியைத் தனியே இயங்கும் ஆற்றல் உள்ளதும் ஒரு மாத்திரை ஒலிப்பதுமாகிய உயிரெழுத்துகளின் மேல் இடுதல் தவறு என்கிறார் இவர். |