| வடிவங்கள் வேறுபடும். இத்தகைய வேறுபாடுகளை எல்லாம் அநுபவத்தால்தான் அறிந்து கொள்ள முடியும். (56) | 
| | 57. | மற்றொரு கலைஎன மாறுபடும் எழுத்தை |  |  | வைத்தவன் உள்ளக் குறிப்புஎனல் வழக்கே. | 
 | 
	| இது தமிழ் எழுத்துத்தானோ அல்லது வேறுமொழியோ என்று மயங்கும்படி ஓர் எழுத்து இருந்தால் அதை எழுதியவனுடைய உள்ளக்குறிப்பு என்று கொள்வதே மரபாகும் என்றவாறு. | 
	| மற்றவர்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் மறைமொழியாக எழுதப்படும் வரிவடிவம் பற்றியது இந்நூற்பா. இத்தகைய சங்கேதக் குறியீடுகளை அவற்றை எழுதினவனே அறிவான்; மற்றையர் அறியார். எனவே இது அவன் உள்ளக்குறிப்பு ஆயிற்று. (57) | 
| | 58. | கலைமுதல் எழுத்தே ஆம்எனல் காணும் |  |  | சீரியர் மகிழ்வான் தெரிந்த வண்ணம் |  |  | உருவுடன் ஒலியும் உரைத்தனம்; அவற்றின் |  |  | நிலையிவண் ஆம்என நிகழ்த்துதும் நினைத்தே. | 
 | 
	| மொழிக்கு அடிப்படையாக உள்ளவை எழுத்துகளே என உணர்ந்துள்ள சான்றோர்கள் உவகை கொள்வதற்காக எமக்குத்தெரிந்த அளவு அவற்றின் வரிவடிவங்களையும் ஒலிகளையும் கூறினாம். இனித் தொடர்ந்து அவ்வெழுத்துகளின் ஒலி நிலை, இயங்குநிலை, இனநிலை போன்றவை இவ்வாறாகும் என்று ஆராய்ந்து கூறுவாம் என்றவாறு. | 
	| இந்நூற்பாவால் எழுத்திலக்கணத்தின் முதல் இயல்பாகிய உருவோசை இயல்பு நிறைவு செய்யப்பட்டு இரண்டாவதாகிய நிலை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது. (58) | 
			| உருவோசை இயல்பு முற்றிற்று |