அறுவகையிலக்கணம்073
68.அகரமும் உகரமும் ஒஎன்று ஆமே.
 
அகரம் உகரம் ஆகிய ஈரெழுத்துகளும் கூடினால் ஒகரத்தைப் போன்று ஒலிக்கும் என்றவாறு.
முன்நூற்பாவில் எகரமே எனத்தெளிவாகக் கூறிய ஆசிரியர். இங்கே ‘ஒஎன்றுஆகும்’ என வேறுவாய்பட்டால் கூறுகிறார். முன்நூற்பா உரையிலேயே இவ்விணைப்புப் பற்றிய கருத்துகளும் கூறப்பட்டன.
தமிழ் ஒகரம் அகரஉகரக் கலப்பாகும் என்பதும் ஆய்வுக்குரியதே.
(68)
69.பதினோ ராவதுஒற்று அகரத்து ஒன்றி
 ஐகாரம் ஆகும்என்று அறிதல்மிக்கு எளிதே.
யகரமெய் அகரத்துடன் சேர்ந்து ஐகாரம் ஆகும் என்பதை மிக எளிதில் யாரும் உணர்ந்து கொள்ளலாம் என்றவாறு.
அய்யம்-ஐயம், அய்வனம்-ஐவனம் எனவரும்.
(69)
70.அகரத்து ஈர்ஏ ழாவதுஒற்று ஒன்றி
 ஒளகாரம் ஆதல் அறிவுளார் அறிந்தும்
 அப்பொறிக் குறியில் பதினா றாவது ஒற்று
 ஏதோ நிமித்தத்து இசைத்ததுஒர் வியனே.
அகரத்தோடு வகரமெய் கூடி ஒளகாரம் தோன்றுவதைப் புலவர் உணர்ந்திருந்தும், ஒளகாரத்தின் வரிவடிவில் எக்காரணம் பற்றியோ ளகரத்தைச் சேர்த்தது ஒரு விந்தையான செயல் ஆகும் என்றவாறு.
அவ்வை-ஒளவை, வவ்வல்-வௌவல் என வரும், ஒள காரத்தின் வரிவடிவில் ளகர வடிவம் ஏனோ சேர்ந்தது என்கிறார். எழுத்துகளின் வரிவடிவத்திற்கும் ஒலிவடிவத்திற்கும் ஏதாவது ஒப்புமை காண விழையும் இவர் போக்கு 66 ஆம் நூற்பாவிலுங் கண்டோம். அடுத்த நூற்பாவிலும் இது புலப்படும்.
(70)