அறுவகையிலக்கணம்077
(எழுவகை எழுத்துகளுள் இதுவரை கூறப்பட்ட உயிர் ஆய்தம், மெய், உயிர்மெய் என்னும் நால்வகை நீங்கிய) மற்றையதான அலகு, கூட்டு, குறிப்பு என்னும் மூவகை எழுத்துகளுக்குரிய இயக்கம் அதனதன் ஒலிக்குரிய இயக்கமேயாகும் என்றவாறு.
கீழ் முந்திரிக்குரிய அலகெழுத்து ணகரம். ஆனால் அது ணகரமாகக் கூறப்படாமல் முந்திரி என்றே சொல்லப்பெறும். எனவே ணகர வரிவடிவம் அலகெழுத்தாக வருங்கால் அதன் ஒலி முந்திரி ஆகும். முந்திரி என்னும் தொடர் மொழியின் ஒலியே இதன் இயக்கமும் ஆகும். கூட்டு, குறிப்பிற்கும் இவ்வாறே கொள்க.
(85)
86.இயங்கு நிலையிவண் இயம்பினம்; இனநிலை
 அறிந்த வாறே அறைகுதும் அன்றே.
எழுத்துகள் இயங்குமாற்றை இதுகாறும் எடுத்துரைத்தோம். இனி அவைகளின் இனப்பாகுபாடுபற்றி யாம் உணர்ந்த அளவுகூறுவாம் என்றபடி.
இந்நூற்பாவால் இயங்கு நிலையை முடித்து இனநிலைக்குத் தோற்றுவாய் செய்து கொள்கிறார்.
(86)
3. இனநிலை
87.உயிர்ஈ ராறும் பொதுவினம் ஆமே.
 
பன்னிரண்டு உயிரெழுத்துகளும் பொது இனம் ஆம் என்றவாறு.
உயிர்களுள் தனித்தனிக் குறில் நெடில்களை தமக்கினம் என்றும், தமக்கெனத் தனிக் குறிலற்ற ஐகான் ஒளகான் இரண்டற்கும் முறையே இகர உகரங்களை இனமாகவும் கொள்ளலே பண்டைய மரபு. இவர் புதியன புகுதலாகப் பொதுவினம் என்ற இப்பாகுபாட்டை வேண்டுகிறார். உபாத்தியாயர் இன்னம் ஒரு படி மேலே சென்று தம் நூலில், “உயிர் முதல் முப்பதும் ஒன்றுஒன்றற்கு இனம்”10 என்கிறார்.