எழுத்திலக்கணம்078
இவ்வாறான புதிய இனப்பாகுபாடுகளால் பெறப்படும் பயன் யாதென விளங்கவில்லை.
(87)
88.ஒற்றுஇனம் உயிர்மெய் இனத்தோடு உறுமே.
மெய்எழுத்துகள் உயிர்மெய்யின் இனத்தையே பெறும் என்றவாறு.
பழைய நூல்கள் ஒற்றுகளை மூவினமாக்கி அவற்றையே உயிர்மெய் பெறும் என்கின்றன. இவர் அம்முறையைத் தலைகீழாக மாற்றுகிறார். இவர் மெய்களைச் சற்றும் இயக்கமற்ற சவங்களாகவே கோடலால் அனைத்து இலக்கணங்களையும் உயிர்மெய்யின்மேல் ஏற்றியே கூறுகிறார். உயிர் பன்னிரண்டு மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்தையும் முதல் எனக் கொள்ளும் அறிவியற் கொள்கையோடிசைந்த தமிழ் இலக்கண மரபிற்கு இத்தகைய அணுகுமுறை ஒத்ததா என்பது ஆய்வுக்குரியது.
(88)
89.க, ச, ட, த, ப, ற என் இருமூன்று எழுத்தும்அவ்
 வருக்கமும் வல்லினம் ஆம்எனல் வழக்கே.
க,ச,ட,த,ப,ற, ஆகிய ஆறு எழுத்துகளையும் இந்த ஆறு வருக்கத்தைச் சேர்ந்த மற்ற உயிர்மெய் எழுத்துகளையும் வல்லினம் எனக்கூறுதல் மரபாகும் என்றவாறு.
(89)
90.ங,ஞ,ண, ந,ம,னஎன் எழுத்துஒர் ஆறும்
 அவற்றின் பகுதியும் மெல்லினம் ஆமே.
ங,ஞ,ண,ந,ம,ன ஆகிய ஆறு எழுத்துகளும், இந்த ஆறு வருக்கத்தைச் சேர்ந்த மற்ற உயிர்மெய் எழுத்துகளும் மெல்லினம் ஆகும் என்றவாறு.
(90)
91.ய,ர,ல, வ,ழ,ள என் எழுத்துஇரு மூன்றும்
 அவ்வப் பகுதியும் இடையினம் ஆமே.
ய,ர,ல,வ,ழ,ள ஆகிய ஆறு எழுத்துகளும், இந்த ஆறு வருக்கத்தைச் சேர்ந்த மற்ற உயிர்மெய் எழுத்துகளும் இடையினம் ஆகும் என்றவாறு,
(91)