எழுத்திலக்கணம்084
அஃகேனத்தில் சூரியன், சந்திரன், தீக்கடவுள் ஆகிய மூன்று சுடர்த் தெய்வங்களும் விளங்குவர் என்று கூறலாம் என்றவாறு.
(98)
99.ஒற்றினந் தோறும் உருவொடு தோன்றாத்
 தெய்வம் புகும்எனம் செப்பிடல் முறையே.
மெய்யெழுத்துகளில்எல்லாம் வடிவம்அற்ற அருவநிலையிலுள்ள தெய்வம் புகுந்து நிலைத்துள்ளது எனலாம் என்றவாறு.
(99)
100.உயிர்மெய் ஆதியில் உரைக்கஅரும் பேதத்து
 அளவுஇல்பல் தெய்வம் அண்ணுறும் அன்றே.
உயிர்மெய் முதலிய மற்றவகை எழுத்துகளுள் பிரித்துக் கூற முடியாதபடி கணக்கற்று விளங்குகின்ற பல தெய்வங்கள் பொருந்தி நிலைத்து வாழும் என்றவாறு.
உயிர்மெய் ஆதி என்றது அலகு, கூட்டு, குறிப்பு எழுத்துகளை,
(100)
101.தெய்வப் பெயரின் சிரத்துஉறும் எழுத்தே
 அவ்வக் கடவுள் அணிநிலை யாம்என்று
 இயம்பும் மாற்றமும் இனிதாம் அன்றே.
தெய்வத்தின் இயற்பெயரின் முதல் எழுத்தே அக்கடவுள் நன்கு நிலைபெற்று ஒளிரும் எழுத்தாம் எனச் சொல்லப்படும் அந்நெறியும் கொள்ளத்தக்கதேயாம் என்றவாறு.
இதுவும் மந்திர சாத்திரத்தைத் தழுவியதே. கணபதி, துர்க்கை, சண்முகர், சம்பு, காளி என்னும் தெய்வங்கட்கு மந்திர நூலார் முறையே கம், தும், ஷம், சம், கம் என்பனவற்றைப் பீஜமாகக் கொள்ளுதல் காண்க.
(101)
102.தெய்வ நிலைஇவண் செப்பினம்; எழுத்தின்
 தன்மை நிலையினைச் சாற்றுதும் சற்றே.