அறுவகையிலக்கணம்085
எழுத்துகளின் தெய்வநிலையை இவ்வாறு கூறினாம். இனி அவற்றின் தன்மைகளைச் சிறிது கூறுவாம் என்றவாறு.
இந்நூற்பாவால் தெய்வநிலை முற்றுவிக்கப்பெற்றுத் தொடர்கின்ற தன்மைநிலைக்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது.
(102)
5. தன்மைநிலை
103.அகரம் சேய்மைப் பொருளினைச் சுட்டி,
 உடைமை காட்டும் இடைநிலை யாகி,
 ஏனைப் பொருள்விளைத்து. ஒவ்வோர் இடத்து
 மிகுதி காட்டும்; அவ்வூர் என்பதும்,
 பைய நாகம் என்பதும், அசைவன்
 என்பதும், அகோரம் என்பதும் நிரைநிரை
 உதாரணம் ஆகும் உற்றுஉணர் வார்க்கே.
அகர எழுத்து தூரத்தில் உள்ள பொருள்களைச் சுட்டும் சேய்மைச் சுட்டு. உடைமைப்பொருளைக் காட்டும் இடை நிலை, அன்மைப் பொருளைக் காட்டும் முதல்நிலை, மிகுதியைக் காட்டும் முதல்நிலை என்று வரும். அவ்வூர், பைய நாகம், அசைவன், அகோரம் என்பன முறையே இவற்றிற்கு உதாரணம் ஆகும் என்றவாறு.
இயலுமிடங்களில் எல்லாம் நூற்பாவிலேயே எடுத்துக் காட்டுகளையும் அமைத்துவிடுவது இவ்விலக்கணத்தின் தனிச் சிறப்பாகும். இதனால் நூலாசிரியரின் கோட்பாட்டைத் தெளிவாக அறிந்துகொள்வது எளிதாகிறது. பையை உடைய நாகம் - பைய நாகம் என்புழி உடைமைப் பொருளிலும், சைவன் அல்லாதவன் அசைவன் என அன்மைப் பொருளிலும், கோரத்தில் மிக்கது அகோரம் என மிகுதிப் பொருளிலும் வந்தன.
(103)
104.ஆஎனல் வினாவாம்; அதாஎனல் உதாரணம்.
 
ஆ என்பது வினாப் பொருளில் வரும். அதா என்ற சொல் உதாரணமாகும் என்றவாறு. அது + ஆ = அதா, அதுவா.
(104)