எழுத்திலக்கணம்086
105.இகரம் அணித்துஆம் பொருளினைச் சுட்டி
 உடைமை காட்டும் கடைநிலை ஆகும்;
 இப்பணம் கண்ணி எனும்இவை உதாரணம்.
இகரம் அருகில் உள்ள பொருள்களைச் சுட்டும் அண்மைச் சுட்டு ஆகவும், உடைமைப் பொருளைக் காட்டும் ஈற்றுநிலை ஆகவும் வரும். முறையே இப்பணம், கண்ணி என்பன எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
கண்களை உடையவள் கண்ணி என உடைமைப் பொருளில் வந்தது.
(105)
106.உகரம்ஓர் பொருளின் நடுநிலைச் சுட்டாம்
 உவ்விடம் என்பது உதாரணம் ஆமே.
உகரம் மிகவும் அண்மையோ அன்றி மிகவும் சேய்மையோ அல்லாமல் இடைப்பட்டுள்ள பொருள்களைச் சுட்டும். உவ்விடம் என்பது எடுத்துக்காட்டு ஆகும் என்றவாறு.
(106)
107.எகரம் முதல்நின்று பொதுப்படச் சுட்டி
 ஐயம் தீர்வான் வினவல் ஆகும்;
 எத்தெய்வம் மேலாம் எனும்சொல் உதாரணம்.
எகரம் முதல்நிலையிலிருந்து பொதுவாக ஒருபொருளைக் குறிப்பிட்டு அப்பொருளின் எதாவது ஒரு தன்மையைப் பற்றி ஏற்படும் சந்தேகத்தைக் கேட்கும் கேள்வியாகும். எத்தெய்வம் மேலாம் என்ற வினாவிலுள்ள எத்தெய்வம் என்னும் சொல் எடுத்துக்காட்டு ஆகும் என்றவாறு.
ஒரு பொருளை முழுவதும் ஐயுறாமல் அதன் ஏகதேசத்தை மட்டும் ஐயுற்று வினவுங்கால் எகரம் வரும் என்க. எத்தெய்வம் என்புழி அத்தெய்வத்தின் தன்மைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பிறிதொரு தெய்வத்துடன் ஒப்பிடப்படுகிறது. முழுத் தன்மையில் ஐயம் வந்தால் ஆகாரம் பெற்று தெய்வமா என வரும்.
(107)