| ஆயினும் விரித்துஈண்டு அறிந்த மட்டும் | | நுவலினும் பெருத்து நூல்எழில் குன்றும் | | ஆதலின் விடுத்துஇனி இவற்றின் புணர்ச்சி | | இயல்பு கூறுதும் ஏன்றமாத் திரமே. |
|
இங்கே கூறப்படாத பிற எழுத்துகளின் இயல்புகள் அனைத்தும் புலவர்களால் அறியப்படவேண்டியதே ஆகும். எனினும் அனைத்தையும் ஒவ்வொன்றாக விரித்துத் தெரிந்த அளவு இங்கே கூறப்புகின் இந்நூல் மிக விரிந்து கவினழியும். எனவே தனி எழுத்துகளின் தன்மைநிலையை இத்துடன் நிறைவுசெய்து அடுத்து அவற்றின் புணர்ச்சி விதிகளைப் பற்றி இயன்ற மட்டும் கூறுவாம் என்றவாறு. |
தமிழ்ப் புலவர்களை அகத்தியரின் அடியார்கள் எனக் குறிப்பிடுவது இவர் வழக்கம். இதனை இவரால் இயற்றப் பெற்ற புலவர் புராணத்தில் பரவலாகக் காணலாம். |
இந் நூற்பாவால் எழுத்திலக்கணத்தின் இரண்டாம் பிரிவாகிய நிலை இயல்பை முற்றுவித்து மூன்றாம் இயல்பாகிய புணர்ச்சி இயல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்கிறார். (113) |
நிலை இயல்பு முற்றிற்று. |
இந்நூலாசிரியர் புணரும் இரு சொற்களையும் நிலைமொழி வருமொழி என வகுத்துக்கொண்டு புணர்ச்சிவிதிகளைக் கூறுவதில்லை. இரண்டு சொற்கள் தாம் புணருங்காற் பெறும் மாற்றங்கள் மெய்ம்மயக்க விதி முறைகளாலேயே என்பதனால் இவர் நிலைமொழியின் ஈற்றெழுத்தையும். வருமொழியின் முதல் எழுத்தையும் கொண்டு கூறப்படும் இலக்கணம் எழுத்திலக்கணமே எனக் கருதி இங்கே வைத்தார். தொல்காப்பியத்தும் புணரியல் எழுத்ததிகாரத்தே இடம் பெற்றது. நன்னூலார் தான் பதவியல் எனத் தனிப் பாகுபாடு செய்து புணர்ச்சி விதிகளை எழுத்திலக்கணத்தினின்றும் பிரித்துள்ளார். |