அறுவகையிலக்கணம்091
இப்பிரிவில் புணர்ச்சி விதிகளோடு ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம், முற்றியலுகரம், மகரக் குறுக்கம், வடமொழிச் சந்திகள் ஆகியனவும் கூறப்படுகின்றன.
114.சுட்டுஎழுத் திடைஎவ் வுயிர்வந்து ஒன்றினும்
 வகரஒற்று இடைக்கொடுஅவ் வுயிர்மெய் ஆகும்;
 அவ்வானை இவ்விரும்பு உவ்வெழுத்து எவ்வோலை
 என்னும்நான் மாற்றத்து இயல்பே விளங்கும்.
சுட்டெழுத்துகளோடு எந்த உயிரெழுத்து வந்து புணர்ந்தாலும் வகர மெய் இடையில் தோன்றுவதோடு உயிரும் வகரவர்க்க உயிர்மெய்யாகத் திரியும். அவ்வானை, இவ்விரும்பு, உவ்வெழுத்து, எவ்வோலை என்ற நான்காலும் இவ்விலக்கணம் தெளிவாக விளங்கும் என்றவாறு.
முன் இவரால் “எகரம் முதல்நின்று பொதுப்படச் சுட்டி ஐயம் தீர்வான் வினவலாகும்”1 என வினாச் சுட்டாகக் கொள்ளப்பட்டதால் இங்கும் எகரம் சுட்டுப் பெயருடனேயே ஆளப்பட்டது. அ + ஆனை; இ + இரும்பு; உ + எழுத்து; எ + ஓலை என்பனவற்றுள் வகரமெய் தோன்றியதோடு ஆ, இ, எ, ஓ என்னும் உயிர்கள் முறையே வா, வி, வெ, வோ எனத் திரிந்தமை காண்க.
இவ்வாசிரியரால் இயற்றப்பெற்ற “ஏழாமிலக்கணம்” என்ற நூலின் எட்டாவது நூற்பா இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
(114)
115.உயிர்மெய்ப் பொறிமுன் உறுமொழிச் சுட்டில்
 அவ்அவ் வருக்கத்து ஒற்றுஇடை தோன்றும்;
 அக்கோன் இந்நகர் எவ்வேல் எனவே.
உயிர்மெய் எழுத்துகள் வந்து சுட்டெழுத்துகளோடு புணருங்கால் அவ்வுயிர்மெய்யின் வருக்கத்து மெய்எழுத்து இடையில் தோன்றும். அக்கோன், இந்நகர், எவ்வேல் என்பன உதாரணங்களாம் என்றவாறு.