எழுத்திலக்கணம்092
அகர இகர எகரச் சுட்டுகளுடன் ககர, நகர, வகர வருக்க உயிர்மெய்கள் புணர முறையே க், ந், வ் இடையில் தோன்றின. உரையிற் கோடலாக உப்பையன் போன்ற உகரச் சுட்டையும் கொள்க.
இங்கு ஏழாம் இலக்கணம் பத்தாம் நூற்பா காண்க.
(115)
116.இருபால் விகுதிகள் சுட்டில் அகரம்
 ஒற்றுஇன்றி வகரமாய் அணைதலும் வாய்பாடு;
 அவன்இவள் எவர்எனல் உதாரணம் ஆமே.
ஆண்பால், பெண்பால், இவ்விரண்டிற்கும் பொதுவான பலர்பால் என்னும் இவற்றின் விகுதிகள் ஆகிய அன், அள், அர் என்பவை சுட்டெழுத்துகளுடன் புணர்வழி (உயிரெழுத்துப் புணர்ச்சியில் இடையில் தோன்றும்) மெய்யெழுத்து வராமல் அகரம் வகரமாகத் திரியும். அவன், இவள், எவர் என்ற மூன்றும் எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
இருபால் என்ற சொல்லை இரட்டுற மொழிதலாக்கிப் பலர்பாலும் உரைக்கப்பட்டது. இருபால்-ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டு என்பது ஒன்று; இருபால் விகுதி-இருபாலுக்கும் பொதுவான பலர்பால் விகுதி. உதாரணம் நோக்கின் இதன் இன்றியமையாமை விளங்கும். அ + அன் என்பதாகக் காண்க.
(116)
117.ஆஊ ஓஎனும் எழுத்துஒரு மூன்றும்
 பின்வரும் உயிர்களை வகரஒற்று உட்புகச்
 செய்வன; உதாரணம் ஆவாளி எனலும்,
 ஊவிட்டான் எனலும், ஓவென்றான் எனலுமே.
ஆ, ஊ, ஓ, ஆகிய மூன்று நெடில்களோடு உயிர்எழுத்துகள் சேர்ந்தால் வகர ஒற்று இடையே தோன்றும். ஆவாளி, ஊவிட்டான், ஒவென்றான் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.