எழுத்திலக்கணம்094
“அம்முன் இகரம் யகரம் என்று இவை எய்தின் ஐஒத்து இசைக்கும்; அவ்வோடு உவ்வும் வவ்வும் ஒளவோரன்ன”1 என்றார் பவணந்தியாரும்.
(119)
120.ஒகரத் துடனஉயிர் மிகைபட ஒன்றா;
 ஒன்றினும் அகரத்து இயல்பே ஒளிர்தரும்;
 ஒவ்வெழுத்து எனும்சொல் உதாரணம் ஆமே.
ஒகர உயிர் (அதிகமாக மொழியீற்றில் வருதலின்மையின்) பிற உயிர்களுடன் பெரும்பாலும் புணராது. அங்ஙனம் ஒரோ வழிப் புணரினும் அகரத்திற்குரிய இலக்கணத்தைப் பெற்று வரும். ஒவ்வெழுத்து என்பது இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு.
அகரத்தியல்பு முன், “வகரவொற்று இடைக்கொடு அவ்வுயிர் மெய் ஆகும்”2 என உரைக்கப்பட்டது. அவ்விதி பற்றி இங்கு ஒ + எழுத்து ஒவ்வெழுத்தாயிற்று.
இவ்வியல்பின் முதல் ஏழு சூத்திரங்களான் நிலைமொழி ஈறு உயிராக இருக்கும் சிலவற்றின் புணர்ச்சிவிதிகள் கூறப்பட்டன.
(120)
121.ஒருபொறிப் பின்னே உறும்ஆய்தம் தன்பின்
 வல்லுயிர் மெய்யே வருமாறு நிற்கும்;
 எஃகம், அஃது, கஃசுஎனல் உதாரணம்.
ஒரு சொல்லில் இரண்டாவது எழுத்தாக அஃகேனம் நிற்பின் அதனைஅடுத்து வல்லினத்தைச் சேர்ந்த உயிர்மெய் மட்டுமே (மூன்றாமெழுத்தாக) வரப்பெறும். எஃகம், அஃது கஃசு என்பன இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு.
“ஆய்தம் தானே குறியதன் கீழ்த்தாய் வலியதன் மேல் வந்து இயலும் என்ப”3 என்றபடி தனிமொழியில் எப்போதும்