எழுத்திலக்கணம்096
கொளலாம்; சிறியார் துணிந்தவன் செப்புதல் பிழையே” என்பவர் இவர்.1
(122)
123.ரழஒற்றுத் தம்உயிர் மெய்யே தழுவா;
 வந்திசேய் உளன்எனின் வரும்உதா ரணமே.
ரகர ழகர மெய்கள் இரண்டும் தம் வருக்க உயிர்மெய்களுடன் மயங்கா. மலடிக்கு மகன் இருக்கிறான் என்றால் இதற்கும் எடுத்துக் காட்டு உளதாகும் என்றவாறு.
இல்லாதவைகளைக் காட்டுதல் இயலாது என்பதை வேறு வாய்பாட்டாற் கூறினார்.
இந்நூற்பாவில் இடம் பெற்ற ரகரம் பிறிதோரிடத்தில் இவரால் உலக வழக்கு நோக்கி, “அவற்றிடை ரகரம் சிறுபால்விர்ரென எறிந்தான், சர்ரெனச் சென்றது என வருமே”2 எனத் தழுவிக் கொள்ளப்பட்டுள்ளது.
(123)
124.யரழஒற் றுக்கள் அவற்றின் பின்னர்
 ஒற்றும் சிற்சில புணர நிற்பன;
 மெய்ம்மறை, நிவிர்த்தி, புகழ்ச்சிமூன்று உதாரணம்.
ய, ர, ழ ஆகிய மூன்று மெய்களும் தம்மை அடுத்தும் சில ஒற்றுகள் மயங்கி வருமாறு விளங்கும். மெய்ம்முறை, நிவிர்த்தி, புகழ்ச்சி ஆகிய மூன்று சொற்கள் இதற்கு எடுத்துக் காட்டாம் என்றவாறு.
சிற்சில ஒற்று என்புழி ஒரே சொல்லில் இரு மெய்கள் ய, ர, ழவின்பின் வரும் எனலாகாது. பதினெட்டு மெய்களுள் சிலவே புணர நிற்பன எனக் கோடல் வேண்டும். அவை க, ச, த, ப, ங, ஞ, ந, ம என்னும் எட்டு மெய்களே என்பதைத் தொல்காப்பியர், “யரழ என்னும் மூன்றுமுன் ஒற்றக் கசதபஙஞநம ஈரொற்று ஆகும்.”3 எனத் தெளிவாக்கியுள்ளார்.
(124)