எழுத்திலக்கணம்098
“ஞநமுன் தம்மினம் யகரமொடு ஆகும்”1 என்ற விதியில் இருந்து 122 ஆம் நூற்பா உரையுள் கூறப்பட்ட காரணம் பற்றி யகரத்தை நீக்கினார். “உரிஞ்சுஎனும் மொழியை உரிஞ் எனக் குறைத்து ,,,,,,,,,,,,,,,,,,,,,,, உழல்வது பிழை; அவை சொல் நயம் உணரார் தோய்தற் பாலவே”2 என்னும் இவர் கருத்து ஈண்டு நோக்கற்பாலது.
(127)
128.ணகர உடற்பின் அதனொடு கசடப
 ஞமவத் தோன்றும் உயிர்மெய் யாயே;
 பண்ணை எண்கு புண்சேர் பிண்டம்
 பண்புவண் ஞானம் பண்மறை தண்வான்
 என்னும் சொற்கள் இயல்உதா ரணமே.
ணகர மெய்யைஅடுத்து ண, க, ச, ட ப, ஞ, ம, வ ஆகிய எட்டு வருக்க உயிர்மெய்கள் மயங்கி வரும். பண்ணை, எண்கு, புண்சேர், பண்டம், பண்பு, வண்ஞானம், பண்மறை, தண்வான் என்பன இதற்கேற்ற எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
தொல்காப்பியரும்,3 பவணந்தியாரும் இவ்வெட்டு உயிர்மெய்களுடன் யகரத்தையும் சேர்த்துரைப்பர். “ணனமுன் இனம்கச ஞபமய வவ்வரும்”4 என்பது நன்னூல். இவ்வாசிரியர் யகரத்தை விட்டு விட்டார்.
இவர் “யகரம் ஒழிந்த ஈற்று ஒற்று எதனொடும் யகர உயிர்மெய்வரில் இகரம் இடைதோன்றும்”5 எனும் கொள்கையர் ஆதலின் இங்கனம் செய்தார். எனினும் இகரஞ் சார்ந்த ஓசை இவருக்குப் பிடிக்கவில்லை என்பது “ஐந்துயிர்க் குறிலினும் யகர உயிர்மெய்யின் முந்துவ புணரில் வகர ஒற்றுடன் அதன் இகரமும் நடுவரும்: எவ்வாறென்னில் அவ்வியமன்னே, இவ்வியானையே, எவ்வியுகமே, உவ்வியூகமே, ஒவ்வியோகாதனமே எனச் சிறு பால வண்டமிழ்ச் சுவைதேர் மாந்தர்கைப்பனவே”6 என்றநூற்பாவால் தெரிகிறது.
(128)