எழுத்திலக்கணம்110
அவர் விதிப்படி நெடில் அல்லது பல எழுத்துகளை அடுத்து வந்த ணகரமெய் நகரப்புணர்ச்சியில் வருமொழி முதலை ணகரமாக்கித் தான் கெட்டுவிடுகிறது, பாண் + நன்று பாணன்று; அமண் + நிலை = அமணிலை என வரும். தனிக் குறிலை அடுத்து வரும் ணகரம் தான் கெடாது நின்று வரும் நகரத்தையும் ணகரமாக்கும். இவ்விதிதான் இந்நூற்பாவில் கூறப்பட்டது.
(146)
147.மகர ஒற்றுத் தன்னொடு ஞநவின்
 உயிர்மெய் தோன்றின் தான்இறந்து ஒழியும்;
 ஒவ்வோர் இடத்தே அவ்வவ் வொற்றாம்.
 வருஞாயிறு எனலும், பொருநீர்மை எனலும்
 செஞ்ஞாயில் வெந்நரி என்பவும் உதாரணம்.
நிலைமொழி ஈற்று மகரமெய் வருமொழி ஞ, நக்களுடன் புணரும்போது கெட்டுவிடும். வருஞாயிறு, பொருநீர்மை என்பன இதற்கு உதாரணங்கள் ஆகும். சிற்சில இடங்களில் அம்மகரமெய் வருமொழி ஞ, நக்களாகத் திரியும். செஞ்ஞாயில், வெந்நரி என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
நன்னூல், “நும், தம், எம், நம் ஈறாம் மவ்வரு ஞநவே”1 என இவ்விதியை மேற்கண்ட நான்கு சொற்களுக்கே உரியதாக்குகிறது. வீரசோழியம்தான் “ஞநமக்கள் பின்வரின் சாற்றும் ம போம்”2 என இதனைப் பொதுவாக்குகிறது. இவர் வீரசோழிய நெறியைக் கைக்கொண்டு இவ்வாறு கூறினார். எனினும் மரம் + ஞாயில் = மரஞாயில், வனம் + நரி = வனநரி எனவே வருதலால் ஒவ்வோர் இடம் என்றதைத் தனிக்குறிற்பின் வருமிடத்தை எனக் கொள்ளலாம்.
(147)
148.னகர மெய்யும் ணகரஒற்று அதுபோல்
 வரும்நகர உயிர்மெயைத் தன்னது ஆக்கும்;
 நின்னாய் எனும்சொல் நிகழ்த்துஉதா ரணமே.