அறுவகையிலக்கணம்119
(வடமொழிகளாகிய) நிலைமொழிஈற்று இகரத்தின்முன் இகர உயிர்வரின் அது நெடிலாக விளங்கும். முனீந்திரன் என்பது இதற்கு உதாரணமாகும் என்றவாறு.
இதுவும் 158 ஆம் நூற்பாவில் கூறப்பட்ட தீர்க்க சந்தி ஆகும். நூற்பா குறிலை மட்டும் கூறினும் மகீசன், நதீசன் என வருஉம் நெடில்களும் தீர்க்க சந்தியே ஆம்.
(160)
161.ரகர அகரம் பின்வரும் அகரம்
 ககரம் ஆகக் காட்டலும் உடைத்து;
 முரகரி அரகர எனும்இவை உதாரணம்.
தொடர்மொழிகளில் ரகரத்தை அடுத்த அகரம் சில வட சொற்களில் ககரமாகவும் விளங்கும். முரகரி, தரகர, அரகர என்பன எடுத்துக் காட்டுகள் ஆகும் என்றவாறு.
இது புணர்ச்சி விதியன்று. ரகரத்தை அடுத்த ஹகரம் வடமொழில் இயல்பாகப் புணரும், (முர + ஹரி = முரஹரி; ஹர + ஹர = ஹர ஹர) இவற்றுள் வடமொழி, ஹகரம் “முப்பதுசயவும், மேலொன்று சடவும், இரண்டு சதவும், மூன்றே அகவும்”1 என்ற விதிபற்றி மொழி முதலில் அகரமாகவும் இடையில்ககரமாகவும் திரிகிறது. ஹர ஹர என்பது அரகர என வருமிடத்து இது மிகத்தெளிவாதல் காண்க.
காட்டலும் உடைத்து என்ற உம்மையானே சில இடங்களில் ஹரிஹரன் என்பது போலத் தற்சமமாக நிற்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார். அற்றேல் அதனை அரிகரன் எனத்திரித்தால் பொருட்சிறப்பழிதல் காண்க. அச்சொல் ஹரிஹரன் என்றோ அரிஹரன் என்றோதான் வருதல் வேண்டும். வடமொழி எழுத்தே வேண்டாமெனில் இருசொற்களையும் தனித்தனியே அரி, அரன் எனத் தமிழாக்கித் தமிழ் விதி பற்றி அரியரன் எனப் பொருத்துக.
(161)