எழுத்திலக்கணம்120
162.அகர உகரம் உயிர்மெய் ஆம்கால்
 பின்வரும் உயிர்களை வகரம் ஆக்கலும்
 இகரமும் எகரமும் அவன்ஆம் காலை
 யகரம் ஆக்கிடலும் உயிரெழுத்து இயல்பே;
 ஆதலின் விடுத்துஇனி அளபுஉரைக் குதுமே.
நிலைமொழியீற்று உயிர்மெய்யாம் அகர உகரங்களுடன் வருமொழி உயிர் புணருங்கால் அவ்வுயிர் வகரவருக்க உயிர்மெய்யாகத் திரியும். அவ்வாறே இகர எகரங்களோடு புணருங்கால் யகர வருக்க உயிர்மெய்யாகத் திரியும். இவை உயிர்எழுத்துகளுக்கு இயல்பே. ஆகவே இதனை மேலும் விரிக்காமல் அடுத்து அளபெடைபற்றிக் கூறுவாம் என்றவாறு.
இந்நூல் 117, 118 ஆம் நூற்பாக்களில் கூறப்பட்ட உடம்படுமெய் பற்றிய விதிகள் வடமொழிச் சொற்கள் தமிழில் தற்பவமாய் வந்து புணரும் போதும் தமிழ் விதியே பின்பற்றப்படும் என்பதைத் தெளிவிப்பதற்காக அநுவதிக்கப்பட்டன. அங்கே கூறியது தனித்தமிழச் சொற்களுக்கு. இவை வடமொழித் திரிசொற்களுக்கு, எனவே இந்நூற்பா கூறியது கூறல் ஆகாது. இவ்விதிகள் வடமொழிச் சொற்களுக்கு என்பது அதிகாரத்தாலே பெற்றாம்.
(162)
163.ஒவ்வோர் பொருளை உறுத்துதல் பற்றி
 வண்ணம் அல்லா இயற்றமிழ்ப் பகுதியில்
 நெட்டெழுத்து அதற்பின் உயிர்அன்பு எடுத்தல்உண்டு;
 உதாரணம் கெடாஅ தழீஇஎனல் பலவே.
(செய்யுளோசை குன்றுமிடத்திலோ, குன்றாஇடத்தும் இன்னிசை நிறைக்கவோ. பெயர்ச்சொல் வினையெச்சச் சொல்லாகப் பொருள் தரும் பொருட்டோ) ஒரு காரணம் பற்றி வண்ணம் அல்லாத இயற்றமிழ்ச் செய்யுளில் நெட்டெழுத்துகள் தத்தம் மாத்திரையின் மிக்கு ஒலிக்கும், கெடாஅ, தழீஇ எனவரும் பல இதற்கு உதாரணங்களாம் என்றவாறு.