அறுவகையிலக்கணம்141
காரணம் குறித்து வருவது எனப் பொருள் கொண்டு அஃதும் ஓர் குறிப்பால் அவிர்தரும் என்றார். அடுத்த நூற்பாவில் பொதுவாக இடுகுறி எனக் கருதப்படும் வேல் எவ்வாறு காரணப் பெயர் ஆகிறது எனக் கூறுகிறார்.
(194)
30.வகரம சத்தி; இல்எனல் உறையுள்;
 வகரமும் இகரமும் வேயாம்: ஆதலின்
 வேல்எனும் இடுகுறி விளங்கிற்று எனப்பலர்
 கருத்துக் கிசையக் கருதுகின் றனமே.
வகரம் சத்தியைக் குறிக்கும் எழுத்தாகும். இல் என்றால் வசிப்பிடம் என்பது பொருள். வகரமும் இகரமும் இணைந்தால் வே ஆகும். எனவே வ + இல் வேல் ஆயிற்று. வேல் என்ற சொல் சத்தியின் உறைவிடம் எனப் பொருள் தந்து காரணப் பெயர் ஆயிற்று, பலர் இவ்வாறே கருதுகின்றனர். யாமும் அக்கொள்கையையே ஏற்றுக்கொள்கிறோம் என்றவாறு.
திருவைந்தெழுத்தில் வகரம் சக்தியைக் குறிக்கும், “இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத் துள்”1 என்பதனால் இது தெரியப்படும். “அகரக் கூறும் இகரக் கூறும் தம்முள் ஒத்து எகரம் ஒலிக்கும்”2 என்பது நன்னூல் விருத்தி. வ + இல் = வேல் = சக்தியின் உறைவிடம் எனக் காரணப்பெயர்.
இங்கு இவ்வாறு கூறிய இவரே ஏழாமிலக்கணத்தில் “வெல்லும் தன்மையில் வேல் என விளம்பினர்”3 என்கிறார். அங்கே வெல் என்ற பகுதியில் இருந்து வேல் என்ற சொல் காரணப்பெயராயிற்று எனப்பட்டது. இவ்வாறு இவ்வொரே சொற்கு இவர் இரு காரணங்களைக் கூறுகிறார்.
(195)
31.னகர ஒற்று ஈற்றுஉறும் ஆண்பாற் பெயர்மிகை;
 பிரமன் பகவன குகன்சிவன் எனவே.