அறுவகையிலக்கணம்153
விகுதிகள் மேலோர் விதித்த வாறே
 உலகர்வாய் மொழியினும் சார்தரல் உளவே.
ஆன், அன், ஆள், அள், ஆம், அம், ஏம், ஏன், உம், ஓம், கின்ற, கிற என்பன முதல் பலவகையான விகுதிகள் முன்னோர் இலக்கணங்களில் வகுத்துள்ள வண்ணமே மக்களின் பேச்சு வழக்கினும் வழங்கி வருகின்றன என்றவாறு.
வந்தான், வந்தனன் - ஆண்பாற் படர்க்கை விகுதி. (ஆன், அன்)
கண்டாள், கண்டனள் - பெண்பாற் படர்க்கை விகுதி (ஆள், அள்)
வருவேன் - தன்மை ஒருமை விகுதி (ஏன்)
நடப்பாம், நடப்பம் - தன்மைப் பன்மை விகுதி (ஆம், அம்)
வருவோம் - தன்மைப் பன்மை விகுதி (ஏம்)
உண்டும் - தன்மைப் பன்மை விகுதி (உம்)
கண்டோம் - தன்மைப் பன்மை விகுதி (ஓம்)
கின்ற, கிற இணைந்த சொற்களை இவர் 211 ஆம் நூற்பாவில் காட்டினார். இலக்கண நூலாசிரியர்கள் கின்று, கிறு என்பனவற்றை நிகழ்கால இடைநிலைகள் எனவே விளக்குவர். இவ்விடைநிலைகளோடு விகுதிபுணர்ந்தே கற்கின்றவன், பாடுகிறவள் என முற்று ஆகும். கற்கின்ற மாணவன், பாடுகிற மங்கை எனப் பெயரெச்சமாக வரும்போதும் அகரமாகிய தெரிநிலைவினைப் பெயரெச்சவிகுதி புணர்ந்தே வரும். ஆனால் இவர் கின்று, கிறு என்பதற்குப் பதில் கின்ற கிற எனக் கொண்டு விகுதி என்கிறார். இக்கருத்து பொருத்தமுடையதாகத் தெரியவில்லை.
இந்நூற்பாவில் தமிழில் உள்ள முப்பத்தேழிற்கு மேற்பட்ட விகுதிகளில் பத்து விகுதிகளும், கின்ற, கிற என்பவை விகுதிகளாகவும் கூறப்பட்டன. அர், ஆர், து, அ, க, ய போன்ற பிற விகுதிகள் ஏழாமிலக்கணத்துள் இடம் பெற்றுள்ளன.
(226)