அறுவகையிலக்கணம்155
தேற்றம், ஐயம், முற்று, எண், சிறப்பு, எச்சம் போன்ற இடைச்சொற்களின் பொருள்கள் அனைத்தும் இந்நூற்பாவினால் அமைத்துக் கொள்ளலாம்.
(228)
64.சிற்சில விகுதிகள் சாரியை என்று,
 ஐஒள இரண்டையும் இயங்குமாறு ஈரிரு
 பொறிகளா வரைதரல் போலி என்றும்
 கேட்டமட் டறிவார் கிளத்தல்உண்டு; அவற்றிற்கு
 இன்னுமோர் வகைப்பெயர் இடினும் என்எனும்
 உரத்தினர் எம்உயிர்க்கு உறுதுணை ஆமே.
சிற்சில விகுதிகளைச் சாரியை என்றும், ஐஒள என்ற இரண்டு எழுத்துகளையும் முறையே அய், அவ் என எழுதுதல் போலி என்றும் பலவாறு அறிஞர்கள் கூறுவார்கள். இவைகளுக்கு இவ்வாறன்றி வேறு வகையாகப் பெயர் இட்டுரைப்பினும் தவறு என்ன எனக் கேட்கும் நெஞ்சுரம் உடையவர்கள் எனக்கு இனிய துணையாவர் என்றவாறு.
கரம், காரம், கான் முதலிய எழுத்துச் சாரியை இங்கே குறிப்பிடப்பட்டன. ஏனெனில் அவையே விகுதிகளைப் போன்று ஒரு சொல்லின் ஈற்றில் பயிலப்படுகின்றன. ஐ, ஒள என்பனவற்றுள் முறையே யகர வகர ஒலிகள் திகழ்வதை இவர் முன் எழுத்தில் (நூற்பா 119) கூறினார். இத்தகைய குறியீடுகளால் பெரும்பயன் இல்லை என்ற ஆசிரியர் கருத்தே இந்நூற்பாவின் பிற்பகுதியால் வெளியாகிறது.
(229)
65.ஒத்தல் உறழ்தல் கடுத்தல் போலல்
 நிகரல் புரைதல் நேரல் மானல்
 அன்னவை உவமைச் சார்புஎன லாமே.
ஒத்தல், உறழ்தல், கடுத்தல், போலல், நிகரல், புரைதல், நேரல், மானல் போன்றவைகள் அனைத்தையும் உவமையைச் சார்ந்த சொற்கள் எனலாம் என்றவாறு.
இந்நூற்பா உவம உருபுகளை உணர்த்துகிறது.
(230)