அறுவகையிலக்கணம்161
இருமெய்யிணைந்த குறில் நெடில்களை அங்ஙனமே கூறாலாகாமையின் முழுச் சொற்களாகக் கூறி ஈற்றெழுத்து அகன்றால் என என்றார்.
(237)
73.குற்றெழுத்து இணைந்தும் குறில்நெடில் புணர்ந்தும்
 இவற்றொடுஒற்று ஒன்றுஇரண்டு அணைந்தும் கரிஎனச்
 சிவாஎனக் குகன்எனக் கவான்என, நிகழ்ந்து
 விடாய்க்குஎனும் இருசொல் கடையெழுத்து ஒழிந்தா
 லெனஇரு மூன்று விதம்நிரை வரும்; இவை
 அன்றியும் ஒருவாறு அறைகுதும் அடுத்தே.
இரு குறில்கள் சேர்ந்தும், அதனோடு ஒரு மெய்யோ இரண்டோ கூடியும் வருவனவும், இதேபோல் குறில்நெடில் சேர்ந்தும் அதனோடு ஒன்று அல்லது இருமெய் கூடியும் வருவனவும் ஆகிய ஆறும் நிரையசை எனப்படும். கரி, குகன், நிகழ்ந், சிவா, கவான், விடாய்க் என்பன முறையே இவற்றிற்கு உதாரணங்களாம். இந்த ஆறுவகையே அன்றிச் சிறுபான்மை வேறொருவகையாகவும் நிரையசை வருவதுண்டு. அதனை அடுத்த நூற்பாவில் கூறுவாம் என்றவாறு.
(238)
74.செய்கை, தர்மம், கல்வி, தன்மை
 பொன்வில் எனுமிவை போன்றநேர் நேரும்
 நிற்கும் இடத்தால் நிரைஎனப் படுமே.
செய்கை, தர்மம், கல்வி, தன்மை, பொன்வில் போன்ற இச்சொற்கள் முன்சொன்ன விதிப்படி தனித்தனியே இருநேர்கள் ஆகும். (இவற்றின் பெயர் தேமா என்பது பின்னர் கூறப்படும்) இத்தகைய நேர்நேர் ஆகியன யாப்பிலக்கணத்திற்கு வழுவாகாமல் அமையவேண்டிய இடத்தில் ஒரு நிரையசையாகக் கொள்ளப்படும் என்றவாறு.
இரு எழுத்துகளுக்கு இடையே ய, ர, ல, ன மெய்கள் நின்று அவ்வெழுத்தின் கூட்டம் இரு நேராகக் கொள்ளப்படின் அந்த யாப்பிற்கு வழு உண்டாகும் என்றால் அத்தகைய இடங்களில்