சொல்லிலக்கணம்178
255 முதல் இதுவரையான ஐந்து நூற்பாக்களில் சொற்களைப் பயன்படுத்துங்காலைப் பொருள்மயக்கம் இல்லாமல் தெளிவாக ஆளவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
(259)
95.ஒருவன் சொல்லொடு கருத்துமற் றொருவனது
 ஆதலும் திருடலும் ஆம்; இவை இரண்டும்
 அவர்திறம் கருதி அறிதல்மிக்க எளிதே.
ஒரு புலவன் வேறோர் புலவனின் சொற்களையும், கருத்துகளையும் அப்படியே எடுத்து ஆளல் உண்டு. கருத்து வளமோ சொல்லாற்றலோ இல்லாத சில போலிப் புலவர்கள் மற்றவர்களின் சொல்லையும் பொருளையும் தம்முடையனவாகக் கூறி ஏமாற்றலும் உண்டு. இந்த இரண்டையும் அப்புலவனின் தகுதியை நோக்கி எளிதில் உணர்ந்துகொண்டு விடலாம் என்றவாறு.
“வந்தாய் போலே வாராதாய் வாரா தாய்போல் வருவானே”1 என்ற நம்மாழ்வாரின் வாக்கில் ஈடுபட்ட கம்பர் “மாயை இது என்கொலோ? வாராதே வரவல்லாய்”2 என விராதன் கூற்றாக அமைக்கிறார். இது திருட்டன்று. பெருங்காவியம் படைத்தற்கேற்ற பேராற்றலுடைய கவிச்சக்கரவர்த்தி தன் இயலாமையின் காரணமாக இவ்வாறு செய்யவில்லை. ஆழ்வார் அருளிச்செயல்களின் ஈடுபாடு இது.
ஆற்றலற்ற புன்கவிஞர்கள் சிலர் சில பிரபந்தங்களில் பாட்டுடைத் தலைவனின் இயற்பெயரை மட்டும் மாற்றி வேறொரு வள்ளலிடம் சென்று தம் சொந்தப் படைப்பாகக் கூறுவதுண்டு எனவும் கேள்விப்படுகிறோம். தனிப்பாடல்கள் சிலவற்றிலும் இத்தன்மை உண்டு. இதுவே பெரும்புலவனின் படைப்பைத் திருடலாகும்.