அறுவகையிலக்கணம்191
மாதொரு பாகராகிய சிவபெருமானும், நந்தியம் பெருமானும், மணமிக்க மலர்களைப் பொழிகின்ற சோலைகள் நிறைந்த பொதிய மலையில் உள்ள அகத்தியரும், மாண்பமைந்த பெரும் புலவராகிய திருவள்ளுவர் முதலிய பலபெரும் கவிஞர்களும் அகப்பொருள் இலக்கணத்தைக் கூறிஇருக்கிறார்கள் என்பதை உலகினர் கூறக்கேட்டும் வெட்கமடையாமல் யாமும் இங்கு அதனைக் கூறத் தொடங்குகிறோம் என்றவாறு.
இந்நூற்பா முந்தைய நூலாசிரியர்களை அவையடக்க வாய்பாட்டாற் சுட்டுகிறது. இறையனார் அகப்பொருளும், அகத்தியரால் இயற்றப் பெற்றனவாகக் கருதப்பெறும் பேரகத்தியம் சிற்றகத்தியம் என்னுமிரண்டும் இங்குக் குறிக்கப்பெற்ற இலக்கணங்கள் ஆகும். திருக்குறள் அகப்பொருளிலக்கணத்தின் இலக்கியமாக இங்குச் சிறப்பாக எடுத்துக்காட்டப்பெறுகிறது.
காம சாத்திரத்தின் முதல் ஆசிரியராக நந்தியைக் கூறம் இந்திய மரபுபற்றி நந்தியம் பகவனும் இங்கு அகப்பொருள் ஆசிரியராகக் கூறப்பட்டுள்ளார். “எல்லா உலகும் படைத்த விதி இயற்றும் தருமம் பொருள் இன்பம் வல்லோர் உணரச் சொன்னவற்றுள் மற்றை இரண்டும் பிறர் செய்தார்; நல்லர் நந்தி இன்பநூல் ஞாலம் எடுக்க அது சுருக்கிச் சொல்லாரியத்தில் ஈரஞ்ஞூறு அத்யாயம்போற் சொன்னானே”1 என்பது இன்பநூல். மெய்யுறு புணர்ச்சியும் அகப்பொருளின் செம்பாதியாதலின் அத்துறையின் இலக்கண ஆசிரியரும் ஈண்டுக் குறிக்கப்பட்டார்.
(280)
4.பூவின் மணம்எனப் புனிதத் தமிழினுக்கு
 ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே.
மலருடைய சிறப்பிற்கு நறுமணம் எவ்வாறு இன்றியமை யாததோ அவ்வாறு தூய தமிழ்மொழியினுடைய சிறப்பிற்கு அகப்பொருள் இலக்கணம் மிக இன்றியமையாத வொன்றாம் என்றவாறு.
(281)