பொருளிலக்கணம்194
இடையிடையே பொருந்தி நீங்கும் செயற்கைச் சிறப்புகளாம். நெற்றி நன்கு அகன்றிருத்தலும், பிறைமதியைக் கவிழ்த்து வைத்தாலன்ன உருவப் பொலிவும் அதற்கு இயற்கையாய் அமைந்த எழிலாம் என்றவாறு.
வேர்வை இயற்கை நிகழ்ச்சியாயினும் பெருநாண், மெய்யுறு புணர்ச்சி போன்றவைகளால் அவ்வப்போது தோன்றி மறைதலின் ஒப்பனைக ளோடிணைத்துக் கூறினார்.
(284)
8.பருவ மடவரல் அன்ன பாங்கினள்
 புருவத் துணையில் போர்மதன் கருப்புச்
 சிலைபொரு தோற்றம் சிறிதும் ஓவா;
 குனிப்புஉறழ் செயலது குலவி மறையுமே.
இளமை, மடப்பம் போன்ற மங்கையர்க்குரிய சிறப்புகளைப் பெற்றுள்ள மகளிரின் இணைப் புருவங்களில் பூசலியற்றும் மாரனுடைய கரும்புவில்லைப்போன்ற எழில் வளைவுத்தோற்றம் ஒருபோதும் நீங்காது. புருவத்தை வளைத்தல், உயர்த்தல் போன்ற பிற செய்கைகள் செயற்கையால் விளைந்து மறையும் என்றவாறு.
மடவரல் என்ற சொல், “மடவரல், உண்கண், வாள்நுதல் விறலி”1 என்புழிப் போல மடப்பம் என்ற பொருளில் ஆளப்பட்டது. உபலக்கணமாக அச்சம், நாணம், பயிர்ப்பு என்பனவற்றையும் கொள்க. குனிப்பு உறழ் செயல் என்றது “நெறித்து மீறியிடங் கோட்டல் சுழித்திடல் குழிப்பாமே”2 போன்ற செயற்கை மாற்றங்களை.
(285)
9.நேரிழை கண்களின் நீட்சியும் கருமையும்
 மருட்சியும் அகலமும் வரிச்சீரும் இயற்கை;
 கடைபடு செம்மையும் கடுவோடு அமிழ்தும்
 மதிக்கனல் சூட்டால் வரும்நீரும் மாறுமே.