பொருளிலக்கணம்200
பிள்ளைப்பேறும் செயற்கையாக அவ்வப்போது நிகழ்வனவாம் என அறிஞர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
‘அகத்து அதைக்கோடல் இயற்கைக் குணமாம்’ என்றா ராதலின் பிறகு புணர்ச்சி என்புழி அதனால் விளையும் வேறுபாடுகள் எனப், பொருள் உரைக்கப்பட்டது.
(297)
21.அன்னமென் நடையே அகற்றரும் இயற்கை;
 சிலம்பொலி யாதிய சேர்க்கைச் செயலாம்
 பழிக்கரும் கற்புடைப் பாவையர் அடிக்கே.
குறைகூற முடியாதபடி அருமைமிக்க கற்பினைஉடைய வரும், சிலைகளைப்போலெழில் வாய்ந்தவரும் ஆகிய மகளிரின் கால்களுக்கு அன்னத்தைப்போல் மெதுவாகவும் எழிலோடும் இயங்கும் நடை ஒன்றே இயல்பான பண்பாம். சிலம்பின் ஓசை முதலிய பிற அனைத்தும் செயற்கைப் புனைவுகளாம் என்றவாறு.
ஆதிய என்றது மிஞ்சி, செம்பஞ்சுக் குழம்பு முதலியனவற்றை.
(298)
22.உந்தியும், ரோமத்து ஒழுங்கும், கவானும்,
 பிறவும் கொளும்இரு பெட்பின் பகுதியைப்
 பைந்தொடிக் கரத்தினர் பண்புநன்கு உணர்ந்த
 செந்தமிழ்ப் புலவரால் தெரிவது முறையே.
கொப்பூழ், மயிர்ஒழுங்கு, தொடைகள் முதலிய மற்ற உறுப்புகளின் இயற்கை செயற்கை இயல்புகள் அனைத்தையும் பசிய வளையல்களை அணிந்த கையினராகிய மகளிரின் இயல்புகளை நன்கு ஆராய்ந்தறிந்துள்ள தமிழறிஞர்கள்பால் கேட்டுத் தெரிந்துகொள்ளல் தக்கதாம் என்றவாறு.
பிற என்றது இவ்வுறுப்பியல்பில் கூறப்படாதன அனைத்தும்.
(299)