அறுவகையிலக்கணம்205
29.பார்வையில், பரிவில், பழகலில், பகர்ச்சியில்,
 செயலில் சேயிழை சிந்தையில் கிடக்கும்
 மோகம் கமழ்வது முறைஎனத் தகுமே.
செம்மையான அணிகலன்களை அணிந்துள்ளவளாகிய தலைவியின் உள்ளத்தில் உள்ளகாதல் அவளுடைய சிறப்பு நோக்காலும், தலைவன்மாட்டுக் காட்டும் தனி அன்பினாலும், அவனோடு பழகுகின்ற முறையாலும், பேசும் மொழிகளாலும் நடைமுறைச் செய்கைகளாலும் வெளிப்படும் எனலாம் என்றவாறு.
(306)
30.தலைவன் மால்உடைத் தையல்ஊண் வெறுக்கும்;
 மதிக்குடைச் செல்வனை வையும்;நெட் டுயிர்க்கும்;
 தென்றலுக்கு அஞ்சும்; சேடியைப் பகைக்கும்;
 அன்னையைத் தினந்தொறும் அழஅழப் படுத்தும்;
 கனவினிற் களித்துக் கண்விழித்து அயரும்;
 வளைகலன் கலைமலர் ஆதிய மறக்கும்;
 அன்ன தன்மை அளவிலாது உறுமே.
இந்நூற்பா பிரிவாற்றாத தலைவியின் தன்மைகளைக் கூறுகிறது. தலைவனைப் பிரிந்து அவ் விரகத்தால் துன்புறுகின்ற பெண் உணவை வெறுப்பாள்; சந்திரனைத் தன்வெண்கொற்றக் குடையாகக் கொண்டுள்ள காமனைப் பழிப்பாள்; அடிக்கடி பெருமூச்சு விடுவாள்; தென்றல் எங்கே தன்னைத் தீண்டி மோகத்தீயை மூட்டிவிடுமோ எனப் பயப்படுவாள்; ஒருவிதக் காரணமுமின்றித் தன் தோழியுடன் சினம் கொள்வாள்; நாள் தோறும் அவள் தாய் தனக்குள் மிக வருத்தும்வண்ணம் வருத்துவாள்; கனவில் காதலனைக் கண்டு மகிழ்ந்து துயில் நீங்கி நினைவில் அவனைக் காணாதே சோர்வுறுவாள்; கை வளையல் முதலிய பூண்களாலும், புத்தாடைகளாலும், பூக்களாலும் தன்னை ஒப்பனை செய்துகொள்வதை மறந்தே விடுவாள், பிரிவாற்றாத தலைவியின் இத்தகைய மெய்ப்பாடுகள் பற்பலவாகும் என்றவாறு.