பொருளிலக்கணம்210
இந்நூற்பா ஆண்பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். உறவுமுறை பற்றியோ அல்லது மனஒருமைப்பாடு பற்றியோ மெய்யான காதல் கொண்ட இருவரின் கூட்டமே முறையானதாகும். இதனால் பிறனில், வரைவின் மகளிர் ஆகியோர் விழைவு விலக்கப்படுகிறது.
(316)
40.மற்றொரு நல்லாள் வனப்புஎடுத்து உரைக்கில்
 பொற்றொடிக் கரத்துப் பூவை ஊடலும்
 இயல்போடு உள்ளதுஎன்று இயம்பினர் பழையோர்.
பொன்னாலாகிய வளையல்களை அணிந்தவளும், நாகண வாய்ப்புள்ளைப் போன்றவளுமாகிய காதலியிடம் வேறொரு பெண்ணின் அழகைப் புகழ்ந்து விவரித்தால் அவள் ஊடல் கொள்வது இயற்கையானதுதான் என்று முன்னூலாசிரியர்கள் மொழிந்துள்ளனர் என்றவாறு.
(317)
41.பொய்யினும் தீராப் புலவியின் மிகையால்
 வைதுஎவன் செய்யினும் மடநல் லார்இரு
 பாடகத் தாள்களில் பாழிஅம் தடந்தோட்
 காளைபோய்ப் பணிதலும் கழிக்கரும் இயல்பே.
ஊடல் உணர்த்துவதற்காகக் கணவன் பற்பல பொய்ம் மொழிகளையும் கூறிச் சமாதானம் செய்தபோதிலும் அமைதியுறாத தலைவி தன்னைப் பழித்தாலும் அல்லது வேறேது செய்தாலும் (அதனாற் சினங்கொள்ளாமல்) வலிமையும், அழகும், பெருமையும் மிக்க புயங்களைஉடைய கொழுநன் அவருடைய சிலம்பணிந்த கால்களில் விழுந்து பணிதலும் தவிர்க்க முடியாததே ஆகும் என்றவாறு.
“மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையும் காலைப் புலவியுள் உரிய”1 என்றார் ஆசிரியரும்.
(318)
42.தன்னுடைக் கேள்வனைத் தலைவியை விழைவார்ப்
 பகைத்தலும் மாந்தர்தம் பண்பின் பழமையே.