அறுவகையிலக்கணம்211
தன் கணவனை அடைய விரும்பும் பிற மகளிரிடத்தில் ஒரு பெண்ணும், தன் மனைவியை நேசிக்கும் பிற ஆடவரிடத்தில் ஓர் ஆணும் பகைமை பாராட்டுதல் மனிதர்களுக்குத் தொன்று தொட்டு வந்துள்ள ஓர் இயற்கைப் பண்பாகும் என்றவாறு.
(319)
43.பெண்மைக்கு அலகையும் பெரிதுஉளம் இரங்கிடல்
 மும்மை உலகமும் மொழிதரு மன்றே.
பெண்ணுக்கு ஏதாவது ஒரு துன்பம் நேர்ந்தால் அதைக் கண்டு இரக்கமற்ற பேயும் மனமிரங்கும் என்று உலகினர் வாய்மொழியாகக் கூறுவர் என்றவாறு.
“பெண் என்றால் பேயும் இரங்கும்” என்பது பழமொழி.
(302)
44.இளமையோடு எழில்நலம் ஏய்ந்தோர்க் காணின்
 உற்று நோக்கி உளம்மிக உருகிடல்
 பெண்மை ஆண்மையின் பெரும்பாற் குணமே.
இளமையும் அழகும் பொலியும் மறுபாலாரைக் கண்டால் அவரை ஏக்கத்தோடு கூர்ந்து பார்த்து மனச்சோர்வடைதல் ஆண், பெண் ஆகிய இருபாலார்க்கும் பொதுவான பெரும் பான்மைப் பண்பாம் என்றவாறு.
பெரும்பாற் குணமே என்றதனால் சிறுபான்மையர் தமக்கு உரியாரையன்றிப் பிறரை விழையாத மனவலிமை உடையவர் என்பதும் அவரே சிறந்தவர்களாவர் என்பதும் பெறப்பட்டன.
(321)
45.தவமும் சமயமும் சாதியும் பொருளும்
 அங்கசன் தொடும்கணைக்கு ஆற்றாது அலமரும்
 மயலாற் கழிவது மாநிலத்து இயல்பே.
மாரனுடைய மலர்க்கணைகள் விளைவிக்கும் காம வேதனையைத் தாங்காமல் வருந்தும் மயக்கத்தால் தவம், சமயம், சாதி