பொருளிலக்கணம்214
போன்ற சில புதிய துறைகளையும் கூறியுள்ளனர். அது மட்டுமன்றி ஓர் ஆழ்வார் பெண் மடலேறிய சிறப்பையும் பாடினார் என்றவாறு.
பொதுவாக நானூறு துறைகள் எனக்கூறப்படினும் கவிஞர் தம்கற்பனைக்கு ஏற்பப் புதுத்துறைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகிறார். பெண் மடல்ஏறியதைக் கூறியவர் திருமங்கையாழ்வார்.
(326)
50.தலைவனும் தலைவியும் தோழனும் தோழியும்
 அன்னமும் கிளியும் அணிமலர்ப் பொதும்பரும்
 கதிர்மதி முகில்வளி கடல்மலை பொருள்போர்
 பார்த்தல் கவிழ்தல் ஆதிய பலவும்
 கருதிக் கூர்ப்புடைக் கவிஞர்வாய் திறக்கில்
 திகழ்தரு துறைவகை செப்பிடற்கு அரிதே.
தலைவன், தலைவி (ஆகிய அகப்பொருளின் முக்கியப்பாத்திரங்கள்) பாங்கன், பாங்கி (ஆகிய துணைப் பாத்திரங்கள்), அன்னம், கிளி (போன்று உவமைக்கும் தூதனுப்பவும் ஏற்ற பொருள்கள்) அழகிய பூங்கா சூரியன், சந்திரன், மேகம், வாடை தென்றல் முதலிய காற்று, சமுத்திரம் வெற்பு(முதலிய மனநிலைக்கேற்ப இன்ப துன்பங்களைத் தரும்) இயற்கைப் பொருள்கள், (பிரிவுக்குப் பெரும்பான்மைக் காரணமான) செல்வம், யுத்தம் ஆகியன, தலைவியைத் தலைவன் பார்த்தல், அவள் நாணித் தலைகுனிதல் போன்ற சுவையான நிகழ்ச்சிகள் என்பனவற்றை எல்லாம் சிந்தித்து அறிவுக்கூர்மையுடைய ஒரு புலவன் பாடத்தொடங்கினால் தோன்றுகின்ற துறைகள்எண்ணிக்கைக் கடங்கா என்றவாறு.
பொருள் என்றதால் கல்விப்பொருள், செல்வப்பொருள் இரண்டுங் கொண்டு ஓதற்பிரிவையும் அடக்குக. போர் என்றால் தூது, பிற அரசியல் வினை முதலிய அனைத்தையும் கொள்க. கூர்ப்பு என்பது அறிவுக் கூர்மையும் பொருள்களின் இயல்புகளை ஆய்ந்துணரும் திறமையும் ஆகும்.