அறுவகையிலக்கணம்215
இந்நூற்பாவால் துறைகள் பல்கக் காரணம் கூறப்பட்டது.
(327)
51.துறைத்தொகை ஒருவிதம் சொல்வார் சொல்லினும்
 நூறுதொட்டு ஆயிரம் வரைநுவன்று அதன்பெயர்
 வேறுஇடத் தகும்என விளம்பல் என்இசைவு;
 உயர்த்தினும் தாழ்த்தினும் ஒண்பொருட் சுவைகண்டு
 எடுத்தலும் இகழ்தலும் இயல்பாம் அன்றே.
அகப்பொருளின் துறைகள் இவ்வளவே என ஓர் எண்ணிக்கையை வரையறை செய்து ஆசிரியர்கள் கூறினாலும் நூறு முதல் ஆயிரம் வரை (புலவனின் திறமைக்கேற்றபடி) துறைகளைக் கூறி அந்தச் சிற்றிலக்கியத்திற்கு (அகத்துறைக்கோவை அல்லது ஐந்திணைக் கோவை என்னாமல்) வேறொரு பெயர் வைத்தாலும் பொருந்தும் என்னும் கொள்கை எமக்கு உடம் பாடாம். பாடல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலும் குறைத்தாலும் சுவைஞர்கள் நூலின் பொருட்சுவையையே கருதி அதனைப் போற்றவோ தூற்றவோ செய்வதுதான் இயற்கை என்றவாறு.
கல்லாடத்தில் நூறு துறைகளே இடம் பெறுகின்றன. பல வருக்கக் கோவைகள் அகராதி வரிசையில் மொழி முதல் எழுத்துகளைக் கொண்டு அமைகின்றன. இவற்றுள் நானூறு துறைகள் இடம் பெற வாய்ப்பில்லை. ஒட்டக்கூத்தர் நாலாயிரக் கோவை பாடியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பல்வேறு இலக்கிய வகைகள் ஆட்சியில் இருத்தலால் சற்றேறக்குறைய நானூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியத்தைக் கோவை என்றும் மற்றவற்றிற்கு வேறு பெயரிட்டும் வழங்கலாம் என்ற கருத்து கூறப்படுகிறது.
இலக்கிய ரசிகர்கள் சொற்சுவை பொருட்சுவை நோக்கி ஒரு நூலைப் பாராட்டவோ தூற்றவோ முற்படுவரே யன்றி அதன் பாடல் எண்ணிக்கையை மட்டும் கொண்டு அங்ஙனம் செய்யார் என்ற திறனாய்வுக் கொள்கையும் இதில் விளக்கப்பட்டது.
(328)