பொருளிலக்கணம்216
52.நாடகம் தொட்டு வண்ணம் ஈறாய
 கவிதொறும் துறைநலம் காட்டல்உண்டு; ஆயினும்
 கட்டளைக் கலித்துறை கடல்உறழ் சந்தம்
 என்னும்இவ் விரண்டால் இயம்பிடல் மிகையே.
(பதம், சிந்து முதலிய)நாடகத் தமிழ்ப் பா வகைகள் முதல் (எட்டுக் கலைகளையும் ஆண்கலை பெண்கலை என்ற இரு பெரும் பகுப்புகளையும் கொண்டு சந்தக் குழிப்போடு பாடப்படும்) வண்ணப் பாடல்வரை எல்லா வகையான யாப்பிலும் அகப்பொருள் துறையின் சிறப்பு காட்டப்படும். என்றாலும் கட்டளைக் கலித்துறை, கடல் போன்ற கம்பீரமான ஒலி நயம் கொண்ட வண்ணம் ஆகிய இந்த இருவகை யாப்பில் அகப்பொருள் துறைகளை இயற்றுதலே பெரும்பான்மை வழக்கம் என்றவாறு.
நாட்டியத்தோடு பாடுவதற்கு ஏற்ற பகுதி நாடகத்தமிழ் என்ற இவ்வாசிரியர் கருத்து முன்பே கூறப்பட்டது. இவர் கூறும் வண்ணத்தின் இலக்கணம் அடுத்த யாப்பிலக்கணத்தில் விரிவாகத் கூறப்படும். பெருங்காப்பியங்களிலும், தனிப் பாடல்களாகவும் அகவல், விருத்தங்கள் வெண்பா போன்றனவற்றால் அகப்பொருள் துறைகள் கூறப்படினும் தனி அகப்பொருளாகப் பாடுங்கால் கட்டளைக் கலித்துறையாலேயே கோவைகள் அமைகின்றன. தணிகைப்புராணமாகிய பெருங்காப்பியத்தின் இடையிலேயே கச்சியப்பமுனிவர் கட்டளைக் கலித்துறைகளானியன்ற கோவையைச் சேர்த்துள்ளார்.1 அவ்வாறே வண்ணங்களின் பாடுபொருளும் மிகப்பெரும்பான்மை அகப்பொருள் துறைகளே.
(329)
53.வண்ணம் புகுபவும் மாட்டா தனவும்
 துறைகளில் உளஎனச் சொல்வது துணிவே.
வண்ணப்பாடல்களில் பாடக்கூடியன, அவற்றுள் சொல்ல இயலாதன என அகப்பொருள் துறைகளில் பல உள்ளன எனக் கூறினால் அது உறுதியானதே என்றவாறு.