பொருளிலக்கணம்218
ஒரே ஒரு துறையை எடுத்துக் கொண்டு பலப்பல பாடல்களில் வேறுவேறு வகையாகக் கூறுதலும் இலக்கண வரம்பிற்கு உட்பட்டதே எனச் சொன்னால் அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றவாறு.
நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒரே துறையில் அமைந்த பல ஒருதுறைக்கோவைகள் தமிழில் உள்ளன. இவற்றுள் அமிர்த கவிராயரின் ஒருதுறைக்கோவை இதே துறையில் நானூறு பாடல்களை உடையது. இங்ஙனமே வெறிவிலக்கல் துறையைக் கூறும் ஒருதுறைக்கோவைகளும் சில உள்ளன. இவைகள் நூறு பாடல்களானியன்றவை. இந்நூற்பா இத்தகைய ஒரு துறைக்கோவைகளை நோக்கி அமைந்ததாகும்.
(332)
56.துறைஇயல்பு இவ்வணம் சுருக்கித் தொல்அகப்
 பொருள்முடித்து இனிமறு பொருட்புக லுதுமே.
துறை இயல்பாகிய இப்பகுதியை இவ்வாறு சுருக்கமாகத் தலைக்கட்டி இத்துடன் தொன்மையானதாகிய அகப்பொருள் இலக்கணத்தையும் நிறைவு செய்து அடுத்து மற்றொன்றாகிய புறப்பொருள் இலக்கணத்தைக் கூறத் தொடங்குவாம் என்றவாறு.
இந்நூற்பாவால் துறையியல்பாகிய இச்சிறுபகுதியும், அகப்பொருளாகிய பெரும்பகுதியும் நிறைவு செய்யப்பட்டு அடுத்த இரண்டாவதாகிய புறப்பொருளுக்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது.
(333)
துறை இயல்பு முற்றிற்று.
அகப்பொருள் முற்றும்.