பொருளிலக்கணம்224
வயல் சார்ந்திருப்பது உண்டு என்றதனாலும், வாழையும் தென்னையும் கூறப்பட்டதாலும் மருத நிலத்தின் இயல்பு கூறப்பட்டது.
(338)
62.வள்ளையும் புன்னையும் மடல்அவிழ் தாழையும்
 பனையும் தோய்வுறப் பரவைசார் நெய்தல்
 என்னும்அந் நிலத்தில் வலைஞர் அன்றியும்
 ஈழரும் கொட்டில்இட்டு இருப்பார்; அன்னவர்
 வருணனைக் கொற்றியை வணங்குநர் தாமே.
வள்ளைக் கொடிகள், புன்னை மரங்கள், இதழ் விரிகின்ற தாழைச் செடிகள், பனை மரங்கள் முதலிய தாவரங்களோடு கடற்கரையில் உள்ள நெய்தல் என்னும் நிலப்பகுதியில் மீனவர்களோடு ஈழவரும் குடிசைகள் அமைத்துக் கொண்டு வாழ்வர். அந்நிலமக்கள் நீர்க்கடவுள் ஆகிய வருணனையும், துர்க்கையையும் வழிபடுவர் என்றவாறு.
(339)
63.இவ்வகை நிலங்கள்ஓர் ஐந்தும் இசைவுறீஇ
 மாநிலம் ஆம்; அதன் வாழ்வுஎலாம் உடையார்
 மன்னரும், புலவரும், மாழைமிக்கு உள்ளார்
 தாமும், கடவுளர் சாற்றரும் பொதுத்தேவு
 ஒன்றும், குரவனும்; உரைக்கும் இம்முறை
 உணர்வார் சிலர்எனல் உறுதியுள் உறுதியே.
இவ்வாறு தத்தம் இயல்பால் வேறுபட்ட ஐந்து வகையான நிலங்களும் சேர்ந்ததே நாடு எனப்படும் மாநிலம் ஆகும். இம் மாநிலத்தின் அனைத்துச் சிறப்பையும் பெற்றவர்கள் அரசரும், புலவர்களும், மிகப்பொருள் படைத்த செல்வரும், சிறு தெய்வங்களாலும் இத்தன்மைத்தென்று கூற முடியாமல் மனமொழி மெய்களுக்கு அப்பாற் பட்ட பரம்பொருளும், ஞானாசிரியனும் ஆவர் என்றவாறு. யாம் கூறும் இந்த நியாயத்தை அனைவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். மிகச் சிலரால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். இது மிக உறுதி என்றவாறு.