பொருளிலக்கணம்226
தெய்வங்களும் பேய்க் கூட்டங்களே. இயற்றமிழில் இணையற்ற பெரும் புலவராகிய திருவள்ளுவரின் திருவடித் தாமரைகளை வணங்கும் ஏற்றம் உடையவர்களே இதனைத் தெளிவாக உணர முடியும் என்றவாறு.
இவ்வாசிரியர் ஓர் உயிரைக் கொல்வதையும், ஊன் உண்பதையுமே தீயனவற்றுள் எல்லாம் தீயதாக எடுத்துக் காட்டியுள்ளார். “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று”1 என்பதே இவருக்கு வேதவாக்கு. ஊன் உண்பார் மக்கள் மத்தியில் வாழத் தகுதியற்றவர் என்னும் தம் கொள்கைக்கேற்ப இவர் அவர்களைப் பாலைக்கு உரியார் என்றார். அவரால் வணங்கப்படும் தெய்வங்களுக்கும் அவர் மது, மாமிசம் படைப்பர். அதனால் அத்தெய்வங்களும் அலகை ஆயின. இவர் வேறொரு நூலில். “சுத்த பூசை தோய்தரும் ஆயின் பேயும் தெய்வம் ஆம்; பிணப்பலி ஏற்கின் தெய்வமும் பேயாம் எனும் இது திறமே”2 எனக் கூறியுள்ளார்.
வெறும் இலக்கணக் கண் கொண்டு மட்டும் பார்க்காமல் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுத்த சான்றோர்களைப் பின்பற்றி அன்பு, அருள் முதலிய தூய பண்புகளை உடையோரே தாம் முந்து நூலிற்கு முரண்படக் கூறும் இத்தகைய புதிய கருத்துகளை நியாயம் என ஒப்பி ஏற்பர் என்ற கருத்தில் வள்ளுவன் திருத்தாள் மலர்தொழும் அவரே என்றார்.
(342)
66.குறிஞ்சி ஆதியில் தவமுதல் தொழில்களும்
 தொண்டகம் ஆதிய பறைகளும் பிறவும்
 தக்கோர் மரபால் தெளிவது தகுதியே.
குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களிலும் நிகழ்கின்ற தவம் புரிதல் போன்ற செயல்களையும், அவ்வத் திணைகளுக்குச் சிறப்பாக உரிய தொண்டகம் முதலிய தாளக் கருவிகளையும் (புள், விலங்கு; பண் போன்ற) பிற சிறப்புக் கூறுகளையும் தகுதியுடைய புலவர்களின் வழக்காற்றைத் துணையாகக் கொண்டு உணர்தல் சிறந்ததாம் என்றவாறு.
(343)