பொருளிலக்கணம்242
அம்போ போரிற் பயன்படாதாதலின் இவற்றைப் பிரித்துக் கூறல் பொருந்தாது. விசயன் சிவபெருமனை வில்லால் அடித்தது விதிவிலக்கு. அது போர் அறம் ஆகாது.
(374)
98.துலையொடு குன்றியும் எவ்வகை நிறைநிலை
 தனக்கும் கருவிகள் ஆம்எனத் தகுமே.
தராசும் குன்றிமணியும் அனைத்துவகையான நிறுத்தி அளத்தலுக்கும் கருவிகளாகும் என்னலாம் என்றவாறு.
குன்றிமணி பொன் நிறுத்தப் பயன்படும் ஓர் அலகு நிறையாகும். பெரிய எடைகளும் இதன் பெருக்கமே ஆதலின் இது எவ்வகைக்கும் ஆம் எனத்தகும் என்றார். இன்றும் ஒரு கிராம் என்பதை அலகாகக் கொண்டே மெட்ரிக் டன் வரை பெருக்கிக் கொள்கிறோம்.
(375)
99.செம்பொடு வெள்ளியும் பொன்னும் சிறியவர்
 செருக்குஎனும் பயிர்மிகச் செய்வன ஆமே.
செம்பு, வெள்ளி, பொன் இவற்றாலான நாணயங்களும், பொருள்களும் தகுதியிற் குறைந்தவர்களுக்குத் தற்பெருமையை மிக அதிகமாக வளரச்செய்யும் கருவிகளாம் என்றவாறு.
இங்கு உலோகத்தின் பெயர்கள் அதனாலானவற்றிற்கு ஆகி வந்தன. கல்வி, ஒழுக்கம் போன்றவைகளால் தகுதியடையாத பூரியார்கண் உள்ள பொருட் செல்வம் அவர்களுடைய இறுமாப்பிற்குக் காரணமாகிறது என்கிறார். உலோகங்கள் அவற்றின் விலைமதிப்பின்படி வரிசைப்படுத்தப்பட்டன.
(376)
100.நெல்முதல் விளைவன பலவும் நீள்நிலத்து
 உயிர்த்தொகை வளர்த்துஅருள் உயர்கரு விகளே.
நெல் முதலாக நிலத்தில் விளையும் பலவகையான பயிர்களும் பெரிய உலகில் உள்ள பல உயிர்க் கூட்டங்களையும் வளர்க்கும் சிறந்த கருவிகள் ஆகும் என்றவாறு.