அறுவகையிலக்கணம்243
உயிர்களின் வளர்ச்சிக்குப் பயிர்கள் காரணம் என்றமையின் உயிர் வாழ்க்கைக்கும் அதுவே எனல் கூற வேண்டாவாயிற்று.
(377)
101.அருளும் பொறுமையும் அன்பும் ஊக்கமும்
 தெருட்சி ஆதியும் சீரிய பெரியோர்
 உண்மைநன்கு உணர்த்தும் என்று உரைக்கும்மூது உலகே.
தன்மாட்டுத் தொடர்பில்லாத பிறரிடத்தும் காட்டப்படும் அருள், தமக்குநேரும் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு அதற்குக் காரணமானவர்களைக் சினவாத பொறுமை, தம்மோடு கூடியவர்களின்பால் நேசம், விடாமுயற்சி, தெளிவான அறிவு போன்ற நற்பண்புகள் அவற்றைத் தம்பால் பெற்றுள்ள சான்றோர்களின் உண்மைத் தன்மையை நன்றாகக் காட்டும் என உலகினர் உரைப்பர் என்றவாறு.
சான்றோர்களின் தகுதியை அவர்களுடைய குணங்களால் அறியலாம் என்றபடி.
(378)
102.மழையும், கூழும், மறையவர் வாழ்க்கையும்,
 புலவர்தம் சிறப்பும், புண்ணியச் சாலையும்,
 கொலைதவிர் வண்மை ஆகிய கொள்கையும்
 நீதிநூல் மன்னன் நெறிதெரிப் பனவே.
(உரிய காலத்தில் அளவாகப் பொழியும்) மழை, உணவு உற்பத்தி, (அறநெறிக்குப் புறமாகச் செல்லாத) அந்தணர்தம் வாழ்க்கைமுறை, புலமை முதலிய கலைவல்லார்களுக்குக் கிடைக்கும் பெருமை, (மருத்துவமனை கல்விச்சாலை இலவச உணவு விடுதி முதலிய பணிகளுக்கான) அறச்சாலைகள் உயிர்க்கொலையை எக்காரணம் பற்றியும் செய்யாத வண்மை போன்ற சீரிய கொள்கைகள் ஆகிய இவை எல்லாம் நீதி நூல்களை உணர்ந்து கடைப்பிடிக்கும் வேந்தனுடைய செங்கோல் முறைமையைக் காட்டுகின்ற கருவிகளாகும் என்றவாறு.
(379)