பொருளிலக்கணம்244
103.வண்ணம் வெண்பா என்னும் இருவகைச்
 செய்யுளும் புலமைத் திறல்காட் டுபவே.
வண்ணப்பாடல், வெண்பா என்னும் யாப்புகளில் அமைந்த இருவகைக் கவிகளும் ஒரு புலவனின் ஆற்றலை அறிவதற்குத் தகுந்த கருவிகளாகும் என்றவாறு.
இவ்வாசிரியர் “இளமைப் புலவோர்க்கு இசையாது இகலி முதியோர் சிலர்க்கு முன்னும்முன் உதவல் வெண்பாப் போலும் வேறுஒன்று இன்றே”1 “தமிழ்க்கவி அனைத்திலும் தலைஎன்றுள்ள வண்ணம்”2 என்பார். மேலும், “வெண்பாத்தோல்வியில் விருது இழப்பதுவும் வண்ணத்தோல்வியில் வார்செவி இழப்பதும் பழமை ஆம்எனல் பல்லோர்வழக்கே”3 ஆதலானும் இவ்வாறு கூறினார்.
(380)
104.இவ்வணம் கருவி இயல்புஎலாம் இயம்பில்
 சுவைகெடும் ஆதலில் சொன்னமட்டு அடக்கித்
 தொகுப்புஇயல்பு எனவும் சொல்லுதும் சிறிதே.
இப்படியே கருவிகளின் தன்மைகள் அனைத்தையும் சொல்லிக் கொண்டே போனால் (நூல் அளவில் மிகவிரிந்து) சுவை குன்றிவிடுமாதலின் இதுவரை கூறியவற்றோடு நிறுத்திக் கொண்டு அடுத்துத் தொகுப்பு இயல்பு என்ற தலைப்பில் சில செய்திகளைக் கூறுவாம் என்றவாறு.
இந்நூற்பாவால் இவ்வியல்பு நிறைவு செய்யப்பட்டு புறப்பொருளின் ஈற்றுப் பகுதியாகிய தொகுப்பியல்பிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
(381)
கருவி இயல்பு முற்றிற்று.