அறுவகையிலக்கணம்247
தனக்கு ஒரு பொருள் வேண்டும் என்னும் ஆசையால் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத் தம் விருப்பத்தின் பகுதியாக இல்லாத பொருள்கள் அனைத்தும் புறப்பொருளே யாம் என்றவாறு.
ஒருவர் ஒன்றின் மீது மிகுந்த பற்றை உடையவராகவும் தேவை உடையவராகவும் இருக்கும் போது அப்பொருளின் தொடர்பில்லாத மற்ற அனைத்துப் பொருள்களும் அவருடைய நாட்டத்திற்கு அப்பாற்பட்டனவே. எனவே புறமாயிற்று.
இனி இந்நூற்பாவிற்கு வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம். காமியம் என்பது உலக ஆசை. இது உடற்பற்றினால் தான் வருகிறது. பிறரையும் தன் உடலின் பெற்றோர், துணைவர், மனைவி, மக்கள், நண்பர், ஊர், நாடு என்ற காரணத்தாலேயே விரும்புகின்றனர். உடலோடு தொடர்புபடாப் பொருள்களில் இவர்கள் நாட்டம் செல்வதில்லை. எனவே “உறுப்பு அலாதன ஒருங்கும் புறமே” எனப்பட்டது. உறுப்பு இங்கு ஆகுபெயராக உடலை உணர்த்திற்கு. உடற்பற்று மிக்கவர்களுக்கு உலகியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் தொடர்பற்றவையாகும் என்றபடி.
(386)
110.பிறவா வீடே பெறமுயன்று இருப்பார்க்கு
 உடம்பும் புறம்என உரைத்தனர் உணர்ந்தோர்.
இனிமேலும் ஒருபிறவி எடுத்து வராமல் இறைவனோடு இரண்டறக்கலத்தலாகிய பரமுத்திப் பேற்றையே அடைவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தத்தம் உடலும் புறப்பொருளே ஆகும் என்று மெய்ப்பொருள் நூலைத் தெளிந்தவர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
இந் நூற்பா “மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை”1 என்னும் தமிழ் மறையை நினைந்து கூறியது.