பொருளிலக்கணம்254
நாம் அகமாகிய உள்ளத்தால் சிந்திக்கும்போது சொற்களாக - அதாவது எழுத்துக் கூட்டங்களாகத்தான் - சிந்திக்கிறோம். அப்போது நமக்கு வரிவடிவ நினைவு வருவதில்லை, ஒலியை மட்டுமேதான் சிந்திக்கிறோம், அதாவது உள்ளமாகிய அகப்பொருளுடன் எழுத்தாகிய புறப்பொருள் சிந்தனையில் அணைந்தபோது வரிவடிவமான புறப்பொருள் அழிந்து விடுகிறது. ஆனால் ஒலியாகிய அகப்புறப்பொருள் மனத்தோடு இணைந்து விடுகிறது.
எனவே வேதியியற் செயற்பாட்டைப்போலவே அகப்புறப் பொருட் சேர்க்கையும் செயல்படுகிறது, இச் செயற்பாட்டின் விளைவை அகம், புறம் எனப் பிரித்துக் கூற இயலாததால் இக்கூட்டமும் பொதுவாகவே கொள்ளத்தக்கதாம். இவ்வாறே அகப்புறச் சமயங்களுக்கும் கொள்க.
(394)
118.உள்எனப் புறம்புஎன உழல்வார் பலரும்
 தள்அரும் துயர்பொதுத் தன்மையில் கெடுமே.
அகச்சமயம் என்றும் புறச்சமயம் என்றும் பேதம் செய்து அலைபவர்கள் பலராலும் நீக்கமுடியாதனவாகிய துன்பங்கள் யாவும் சமயப்பொதுத்தன்மை தோன்றியஉடன் தாமேநீங்கும் என்றவாறு,
“தற்பரம் ஒன்று சமையம் பலவாறு நிற்பதே உண்மை என்று உந்தீபற; நீங்கா நிறைவு அதுஎன்று உந்தீபற”1 “ஓங்கார வித்துஆம் ஒருவனைத் தேறும்முன் நீங்காது சோகம் என்று உந்தீபற; நிசரூபம் ஆம்அது என்று உந்தீபற”2 “உத்தமத்து உத்தமம் ஆம்பேறு வேண்டி ஒருபொருளை நித்தமும் நாடிப் பலதேவு உண்டு என்னும் நினைவைவிட்டுச் சுத்தமெய்ஞ் ஞானம் இதேஎன்று நாளும் துணிந்துநிற்கும் பத்தருக்கு அன்றிஉள் அஞ்சாருக்கு அஞ்சும் பழவினையே”3 என்பன. இவ்வாசிரியரின் உறுதியான கொள்கைகள்.