பொருளிலக்கணம்256
எய்துவது விதேகமுத்தி., இதுவும் உடலோடு கூடியும் கூடாதும் நிகழ்தலின் அகப்புறப்பொதுவாயிற்று, இதனை உணர்ந்தவர் எண்ணிக்கை மிகமிகக் குறைவேயாதலின் சிலரே என்றார்.
(397)
121.அகம்எனம் அகமும் புறம்எனும் புறமும்
 ஒவ்வொரு கண்ணே போலும்; பொதுநிலை
 அவற்றைத் தழுவலின் அவ்விரு கண்களும்,
 மறுத்தலின் வேறுஒரு கண்ணும்மன் னுறுமே.
அகத்தை எப்போதும் அகப்பொருளாகவே கொள்வதும், அதுபோல் புறத்தை எப்போதும் புறப்பொருளாகவே கொள்வதும் இரண்டு கண்களைப்போல் ஆகும். (அகம் ஒரு கண் புறம் மற்றொன்று) ஆனால் அகம்புறம் இரண்டையும் பொதுவாகக் கருதுகின்ற பேதங்கடந்த நிலையோ என்னில் அகம், புறம் இரண்டையும் ஏற்றுக்கொள்வதால் அவ்விரு விழிகளாகவும், சில சமயங்களில் - அதாவது வேறு ஒரு கண்ணோட்டத்தில் மறுப்பதால் வேறு ஒரு கண்ணாகவும் பொருந்தியுள்ளது என்றவாறு,
வேறு ஒரு கண் என்றது ஞானக்கண்ணை., இவ்விழி பொருள்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறதோ அவ்வாறு காணாமல் அதன் உண்மை இயல்பையே காணும்.
(398)
122.அகப்புறப் பொருள்இவண் அடக்கி, மூவகைத்து
 ஆய பொருளிலக் கணம்என முடித்து, இனி
 வேறுஇலக் கணம்சொலும் விருப்பம்உற் றனமே,
அகப்புறப்பொருள் நிலையை இவ்வாறு சுருக்கமாக முடித்து அகம், புறம், அகப்புறம் என்று எம்மால் மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளப்பட்ட பொருளிலக்கணத்தை நிறைவு செய்து. தொடர்ந்து நிறுத்தமுறையானே யாப்பு என்னும் அடுத்த இலக்கணத்தைச் சொல்ல விழைகின்றோம் என்றவாறு