அறுவகையிலக்கணம்265
இவ்வாசிரியப்பா ஒன்பதாகிய ஒற்றைப்படை அடிகளைப் பெற்று வந்தது.
இதிலிருந்து ஆசிரியப்பாவிற்கு அகவலோசையே இன்றியமையாத இலக்கணம் எனவும் மற்ற தொடை நயங்கள் இருக்குமளவு சிறப்படையும் எனவும் கொள்ளலாம், இஃது இவ்வியல்பு ஏழாம் நூற்பாவில் தழுவிக் கொள்ளப்படுகிறது.
(404)
நிலைமண்டில் ஆசிரியப்பா
6.ஈற்றுஉறும் அடிக்கு முந்திய அடியில்ஈர்
 அசைகுறைவு ஆகிய வேற்றுமை ஒன்றே
 அணைவுறும் நேரிசை யகவற் பாவே
 நிலைமண் டிலம்என நிகழ்த்தும் அகவலே.
ஈற்றயல் அடியில் இரண்டு அசைகள் (ஒருசீர்) குறைதலாகிய ஒரு வித்தியாசத்தைமட்டும்உடைய நேரிசையகவல் நிலைமண்டில் ஆசிரியப்பா என வழங்கப்படும் என்றவாறு.
முன்பே கூறியதுபோல் பிற ஆசிரியர்களால் நேரிசை என வழங்கப்படுவதை இவர் நிலைமண்டிலம் என மாற்றியழைக்கிறார். பாடல் முடிவடையும்போது ஒரு சீர் குறைவதாகிய மண்டிலம் (வளைவு) பெறுவதால் இதனை இவ்வாறு வழங்குகிறார் போலும்.
(405)
7.இருவகை அகவலும் எதுகை மாறி
 ஒற்றைத் தொகைபடும் அடியினது ஆகி
 மோனைகெட்டு அங்ஙனம் எதுகை நின்று
 வரினும் கொள்வது வண்தமிழ் இயல்பே.
நேரிசை, நிலைமண்டிலம் ஆகிய இரண்டுவகை ஆசிரியப்பாக்களும் எதுகை இல்லாமலும் ஒற்றைப்படை அடிகளை உடையனவாகவும் மோனை இல்லாமல் அவ்விடத்தில் எதுகை வந்திருந்தாலும் அவற்றைத் தழுவி ஏற்றுக்கொள்வது தமிழ் இலக்கியமரபாம் என்றவாறு,