யாப்பிலக்கணம்270
நேர் என முடிகின்ற மூன்றசைச் சீர்களாகிய காய்ச்சீர்களும் ஈரசையானியன்ற ஆசிரிய உரிச்சீர்களும், தனியாகவரும் ஓரசையும் வெண்பாவிற்கு உரியனவாம் என்பர் புலவர் என்றவாறு.
இவர் தளைகளைப் பற்றியே கூறவில்லை. வெண்பாவில் வெண்டளை அமைதல் அப் பெயரின்றியே இப் பகுதியின் பதினைந்தாம் நூற்பாவில் கூறப்படுகிறது. இங்கு வெண்பாவில் பயின்றுவரும் சீர்கள் இவையிவை என்று கூறப்பட்டன.
(412)
14.வெண்பா ஈற்றே வருவதுஓர் அசைச்சொல்
 அவ்வயின் வராதது மூன்றசைச் சொல்லே,
வெண்பாவின் ஈற்றுச்சீராகவே வருவது ஓரசைச்சீராம், மூவசைச் சீர் வெண்பாவின் ஈற்றில் வராது என்றவாறு,
ஈற்றே வருவது ஓர் அசைச்சொல் என்றதனானே பிற இடங்களில் வராது என விலக்கப்பட்டது. எந்நிலையிலும், ஈற்றில் மூவசைச்சீர் வாரா எனவே (குற்றியலுகரஞ் சேர்ந்த) ஈரசைச்சீர்கள் வரும் என்பது பெறப்பட்டது,
(413)
15.உரிய மூன்றசைச் சொல்லொடும் பின்நிரை
 ஆய ஈரசைச் சொல்லொடும் நேர்வரும்;
 பின்நேர் உளஇரண்டு அசைச்சொல் லோடு
 நிரைவரும் வெண்பா நிலைஉணர் காலே.
வெண்பாவின் தன்மையை ஆராய்ந்தால் அதற்கே உரிய மூன்றசைச்சீராகிய காய்ச்சீருக்குமுன்னும், நிறையசையால் முடியும் ஈரசையாகிய விளச்சீருக்கு முன்னும் நேரசைவரும். நேரசையால் இறும் ஈரசையாகிய மாச்சீருக்கு முன்னால் நிரையசை வரும் என்றவாறு,