யாப்பிலக்கணம்304
வருடப்பதிகம்: இது 60 பதிகங்களை உடைய முருகன் துதி நூல். தமிழ் வருடங்கள் அறுபது ஆதலின் இது இப்பெயர் பெற்றது. ஒரு பதிகத்திற்குப் பனிரெண்டு பாடல்களாக மொத்தம் 720 பாடல்களோடு கடவுள்வாழ்த்து, நூற்பயன் ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 722 கவிகளை உடையது. இதில் 60 யாப்பு வடிவங்களைக் காணலாம், இந்நூல் இன்று வரை அச்சாகவில்லை. விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர்க் கௌமார மடாலயத்தில் 26 ஆம் எண் உள்ள ஏட்டுச் சுவடியாக உள்ளது,
(446)
48.யாப்பியல் துணைக்கொண்டு இனியபாப் பகர்தலில்
 தூயதாம் இலக்கியம் துணைக்கொளல் நலமாம்;
 அதன்நிலை பிறழ்ந்தும் கிடக்கும்; ஆதலின்
 புலவர்தம் துணையே பொருவில்நற் றுணையே,
யாப்பிலக்கணங்களைக் கற்று அதன் உதவியால் இனிய செய்யுட்களை இயற்றுவதைவிடப் பிழையற்ற இலக்கியங்களை மாதிரியாகக் கொள்ளுதல் சிறந்ததாகும். அத்தகைய இலக்கியங்களிலும் சிற்சில இடங்களில் ஏதேனும் தக்க காரணம் பற்றி சில விதிகள் மாறி இருக்க இடமுண்டாதலின் அவற்றையும் தெளிவாக உணர்த்துவதற்கு முறையாகவும், முழுமையாகவும் கற்ற உண்மையான அறிஞர்களின் சார்பே ஒப்பற்ற நல்ல துணையாகும் என்றவாறு.
“காரிகை கற்றுக் கவி பாடலினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்பது பழமொழி, இலக்கியப்பயிற்சி இல்லாதவர்களுக்குச் சொல்லாட்சி, மரபு, பொருள் கோள், தொனிப்பொருள் எதுவுமே தெளிவாக விளங்காது, எனவே இலக்கியப்பயிற்சி வற்புறுத்தப்பட்டது. இவ்வாறு கற்கும் நூல் குற்றமற்றதாக இருக்க வேண்டும். பிழைபட்ட நூல்களைக் கற்றால் குழப்பமே மிஞ்சும், எனவே தூயதாம் இலக்கியம் என்றார்.