அறுவகையிலக்கணம்313
அல்லாற்கு உரைசெயல் அத்தொழில் எருமைக்கு
 இசைத்திடல் ஒப்பாம் எனத்தெளிந் தனமே.
நற் புலமைபெற்று விளங்குவதற்குரியவன் என்றே பிரமனால் எழுதப் பெற்ற தலையெழுத்தை உடையவர்களுக்கு யாப்பிலக்கணத்தைக் கற்பித்தல் இயல்பாகவே பாயுந்தன்மையையுடைய புலிக்குப் பாயும் தொழிலைச் சொல்லிக்கொடுப்பதுபோல் வீண் வேலை ஆகும், “இவனுக்குப் புலமை இல்லை” என விதிக்கப்பட்டவனுக்கு இலக்கணம் கற்பித்தல் எருமைக்குப் பாயச் சொல்லிக்கொடுப்பது போன்று பயனற்ற வேலையாகும். இதனை யாம் சற்றும் ஐயத்திற்கு இடமின்றித் தெரிந்து கொண்டுள்ளோம் என்றவாறு.
“இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு தெள்ளியராதலும் வேறு” என்றபடி சிலர் தெள்ளியராக இருக்கிறார்கள், அவர்களுக்கு இலக்கணப் பயிற்சியே அவசியமில்லை. இலக்கியங்கண்டால் அவர்கள் இலக்கணத்தைப் படைத்துக்கொள்வர். மீன்குஞ்சுக்கு நீச்சல் கற்றுத் தரத் தேவையில்லாதவாறு இவர்கட்குக் காரிகைக் கல்வி இன்றியமையாதது அன்று.
மற்றொரு சாரார் அறிவுத் தன்மையை விட்டு அகன்றே நிற்பவர்கள், ஆ அமுக்கினும் நாழி முகவாது நானாழி என்பது போல் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் திறன் இல்லாதவர்கள்., அவர்களுக்கு யாப்பறிவித்தல் எருமைக்குப் பாயும் தொழிலைக் கற்றுக் கொடுப்பது போல் ஆகும் என்கிறார்.
இந்நூற்பாவால் யாப்பிலக்கணம் என்பது தனி இலக்கணமாகப் பயிலப் படாமல் இலக்கியத்தின் துணை கொண்டும் மெய்ப்புலவர் கூட்டுறவாலும் அறியப் படவேண்டும் என்பதும், அதுவும் தெள்ளியராதற்கேற்ற விதியுடையாருக்கே அமையும் என்பதும் சொல்லப்பட்டது, எனவே குதிரைக்கு நீர் காட்டுவார் போன்று ஓரளவே கூறினோம் என்றும், கூறப்பெறாதனவற்றை மாணவர் தம் பயிற்சியால் கண்டு தெளிய வேண்டும் என்பதும் கருத்து.
(455)