இவ்வறுவகையிலக்கணத்தின் வண்ணவியல்பாகிய இப்பகுதியைப் புரிந்து கொள்வதற்கு அந்நூற்பயிற்சி இன்றியமையாததாதலின் இங்கு இத்துணை எழுத நேர்ந்தது. இதில் கூறப்பட்டுள்ள எட்டு வகையான சந்தங்கள் பற்றி இவ்வியல்பின் இரண்டாம் நூற்பாத் தோற்றுவாயில் சுருக்கமாகக் கூறப்படும். இடையிடையே இன்றியமையாத இடங்களிலெல்லாம் அந்நூற் சூத்திரங்கள் காட்டப்படும். (457) |
58. | களிறே புரையும் களிப்புடைக் கவிஞர்க்கு | | அரியேறு அன்னார்க்கு ஆவி ஆய | | சந்த நிலைஅவர் தாள்மலர் வணங்கி | | வண்ணத்து இயல்புஎனும் நூலிடை வகுத்துக் | | கூறினம்; ஆதலின் இங்ஙனம் குறுக்கிச் | | சிறிது கூறுதும் தெளிவார் பொருட்டே, |
|
மதம் பிடித்த யானையைப் போன்று தம் கல்விச் செருக்கால் இறுமாந்திருக்கும் புலவர்களை அடக்கவல்ல ஆண்சிங்கம் போன்ற பாவலர்களுக்கு உயிரைப்போல் போற்றுவதற்குரியதாகிய சந்தத்தின் இயல்பை அத்தகையோர் (சிங்கம் அனையார்) திருவடித்தாமரைகளைப் பணிந்து “வண்ணத்து இயல்பு” என்னும் பெயர் கொண்ட இலக்கணத்தே வகைப்படுத்தி உரைத்தோம், அங்கே விரிவாகக் கூறியுள்ள காரணத்தால் இங்கே சுருக்கமாகச் சில செய்திகளைத் தேர்ச்சி பெறுவார் பயனடைதற் பொருட்டுக் கூறுவாம் என்றவாறு. |
பொதுவாகப் புலவர்களை யானைகளாகவும் அவர்களைத் தம் புலமையால் வெல்லும் வண்ணப்பாவலர்களை அரியேறாகவும் கூறினார். “வாதுக்காதரமாகிய வண்ணம்”1 “வண்ணத்தோல்வியில் வார்செவி இழப்பதும்”2 என இவர் இந்நூல் புலமை இலக்கணத்தில் கூறுகிறார். |
வண்ணத்தியல்பு நூல் பற்றி முன்னர்க் கூறப்பட்டது. |
|