அறுவகையிலக்கணம்331
வண்ணக் குழிப்புகளை அமைத்துக் கவிபாடும்போது தன, தான என்ற இரு சந்தங்களும் மிகமிகச் சுலபமானவையாம், தத்த, தந்த இரண்டும் (முன்னதைவிடக் கடினமாயினும்) எளியவையே, தாத்த, தாந்த, இரண்டும் பாட அரிய சந்தங்கள் ஆகும், தய்ய, தன்ன எனும் இரண்டும் மிகமிக அரியனவாகும் என்றவாறு,
இந் நூற்பா எளிதில் புணர்க்க வாய்ப்பான சந்தங்களிலிருந்து புணர்த்தற்கரிய சந்தங்களை ஏறுமுகத்தால் சுட்டிக் காட்டுகிறது.
(473)
75.துறைபகர் வண்ணப் பாவின்முற் பகுதியை
 ஆண்கலை என்றும்மற்று ஏனையைப் பெண்கலை
 என்றும் உலகோர் இயம்பிடல் மிகையே.
அகப்பொருள் துறைகளில் ஒன்றை விரித்துப் பாடுகின்ற வண்ணப்பாவின் முற்பாதியை ஆண்கலை என்றும், பிற்பாதியைப் பெண்கலை என்றும் அறிஞர்கள் கூறுவர் என்றவாறு.
ஒரு வண்ணப்பா எட்டுக் கலைகளை உடையது, இரு கலைகள் சேர்ந்தது ஓரடி எனலாம், இவ்வாறு ஓரெதுகைத்தாய நான்கு அடிகள் வரும் முதல் இரண்டு அடிகள் (நான்கு கலை ஆண்கலை எனப்படும்) இவ் வாண்கலையின் முதல் மூன்று கலைகளில் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகளும், நான்காவதில் ஊர்ச்சிறப்பும் இடம்பெறும் “முந்திய பகுப்பின் கலையோர் நான்கில் தலைவன் தன்புகழ் மூன்றிற் கூறிமற் றொன்றில் அன்னவன் உரைநாட் டணிசொற் றேனைய கலைநான்கு இடத்தும் பல்வகைத் துறையில் ஒன்றைத் துகளறக் கூறல் வண்ணப் பாவின் வழக்கெனத் தகுமே”1 என்பது இதன் இலக்கணம்,
அகத்துறை இடம் பெறுகின்ற மூன்று நான்காவது அடிகள் பெண்கலை எனப்படும், பொதுவாக வண்ணங்களில் ஆண்கலையைவிடப் பெண்கலை சற்று எளிமையாக இருக்கும்.